உத்தியோகபூர்வமான இஸ்ராயேல் பிரதமர் எமிரேட்ஸுக்கு விஜயம் செய்தது சரித்திரத்தில் முதல் தடவை.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இணைத்துவைத்த இஸ்ராயேல் – அரபு நாடுகள் ஒத்துழைப்பு படிப்படியாக முன்னேறி வருகிறது. அதன் முக்கிய நகர்வுகளில் ஒன்றாக இஸ்ராயேல் பிரதமரொருவர் எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்திருக்கிறார். 

இஸ்ராயேல் பிரதமர் நப்தாலி பென்னட்டின் எமிரேட்ஸ் விஜயம் பிராந்திய அளவில் அவர்களிடையே நெருக்கமான உறவைக் கட்டியெழுப்பும் மேலுமொரு நடவடிக்கை என்று அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள். ஜோ பைடன் அரசு அதற்கு முன்னிருந்த அரசைப் போல இஸ்ராயேல், வளைகுடா அரபு நாடுகளுக்கு நெருக்கமாக இல்லாததால் அந்த நாடுகள் தம்மிடையே உறவுகளை மேலும் இறுக்கிக்கொள்வது, அவர்களின் பொது எதிரியான ஈரானுடைய முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டை போட ஏதுவாக இருக்கும்.

இஸ்ராயேல் பிரதமர் ஞாயிற்றுக்கிழமையன்று அபுதாபி விமான நிலையத்தில் அபுதாபியின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா பின் ஸாயத்தால் அரச மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார்.

“நாங்கள் பக்கத்து நாட்டுக்காரர் மட்டுமன்றி ஒன்றுவிட்ட சகோதரர்களும் கூட. எமக்கிடையேயான உறவு மிகவும் பிரதானமானது. சகல துறைகளிலும் ஒன்றிணைந்து எங்களது முன்னேற்றத்திற்காக நாம் செயற்படவேண்டும்,” என்று நப்தலி பென்னட் வரவேற்பின்போது குறிப்பிட்டார்.

பட்டத்து இளவரசனான முஹம்மது பின் ஸாயத் அல் நஹ்யானைத் திங்களன்று பென்னட் சந்திப்பார். அவரைத் தவிர மேலும் சில முக்கிய அமைச்சர்களையும் சந்தித்து கூட்டுறவுத் திட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.

சாள்ஸ் ஜெ. போமன்