நவம்பரில் நடந்த தேர்தலின் பின்னர் பேரம்பேசல்கள் நடத்தி மீண்டும் பிரதமராக பெஞ்சமின் நத்தான்யாஹு.

இஸ்ராயேலில் கடந்த ஆறு வருடங்களாக அரசியலில் ஸ்திரமான நிலைமை இல்லாமலேயே இருந்து வருகிறது. எந்த ஒரு தலைவருக்கும் பலமான ஆதரவு இல்லாத நிலையில் பெஞ்சமின் நத்தான்யாஹு மீண்டும் சில கட்சிகளை ஒன்றிணைத்துப் பிரதமராக ஆகியிருக்கிறார். அவரைப் பிரதமர் பதவிக்கு வரவிடலாகாது என்பதையே முக்கிய குறியாக வைத்து ஆட்சியமைத்திருந்த கட்சி தனது நோக்கத்தில் வெற்றி காணாததால் அரசகட்டிலை விட்டிறங்கியிருந்ததால் நவம்பரில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது.

பாலஸ்தீனர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அவர்களுக்கு பாலஸ்தீனா அமைய அனுமதிப்பதா என்ற கேள்வியால்  நாட்டில் வாழும் யூதர்களிடையே உண்டாகியிருக்கும் சிறு சிறு கட்சிகள் அரசியலைத் துண்டாட்யிருக்கின்றன. தீவிரவாதப் பாலஸ்தீனர்கள் ஒரு பக்கமும்  யூதர்களின் தேசியவாதிகள் இன்னொரு பக்கமும் நின்று நாட்டில் வன்முறையை வளர்த்து வருகிறார்கள். 

நத்தான்யாஹு இந்த முறை அமைத்திருக்கும் அரசே இஸ்லாயேலில் இதுவரை உருவாகியிருக்கும் அரசுகளில் அதிக தேசியவாதிகளைக் கொண்டதாகும். இஸ்ராயேல் யூதர்களுக்கு மட்டுமே என்றும், பாலஸ்தீனர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் பகிரங்கமாகக் கோஷமிட்டு, நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வரும் கட்சிகளின் தலைவர்கள் மந்திரிப் பதவிகளையும் பெறவிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

அரசாங்கம் அமைப்பதற்காக ஜனாதிபதியால் கொடுக்கப்பட்ட கெடுகாலம் முடிவடைவதால் தனக்கு மிண்டு கொடுக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்க முன்னரே நத்தான்யாஹு அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கிறார். முன்னர் பதவியிலிருந்தபோது அவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் லஞ்ச ஊழல்கள் மீதான வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *