தேவையான எரிவாயு முழுவதையும் இறக்குமதி செய்யும் துருக்கி விரைவில் ஐரோப்பாவுக்கே ஏற்றுமதி செய்யும் நாடாகலாம்.

தனது பிராந்தியத்தினுள் கருங்கடலின் அடியில்  எரிவாயுவைக் கண்டுபிடித்திருக்கும் துருக்கி அதன் மூலம் நாட்டின் முக்கியத்துவத்தை உயர்த்தலாம் என்று கணக்கிடுகிறது. அதை உறிஞ்சி ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யலாம் என்பது துருக்கிய வல்லுனர்களின் கணிப்பு.  இயற்கை எரிவாயு கண்டுபிடிப்புகள் துருக்கிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், தொந்தத் தெவைக்கான எரிவாயுவையும் பெறுவதன் மூலம் நாட்டை தன்னிறைவு அடையச் செய்யலாம். தற்போது பயன்படுத்தும் அனைத்து எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறது. அதிகளவில் எரிவாயுவுக்காகச் செலவிடும் துருக்கியர் தமது நாட்டின் எரிவாயு கண்டுபிடிப்புகளை விரைவாகப் பயன்படுத்த அவரப்படுகிறார்கள்.

ஸொங்குல்டாக் என்ற நகரிலிருந்து சுமார் 170 கி.மீ தொலைவில் கருங்கடலின் அடியில் சில வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெளியே உறிஞ்சியெடுக்கும் வேலைகள் வேகமாக நடந்து வருவதாகவும் அதுவரை பொறுமையுடன் காத்திருக்கும்படியும் சமீபத்தில் நாட்டின் எரிசக்தி அமைச்சர் தனது செவ்வியொன்றில் மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். தற்போதைய நிலையில் அந்த எரிவாயு இலாபம் தரக்கூடிய அளவுக்கு உறிஞ்சப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

ஸொங்குல்டாக் நகருக்கு அருகே கருங்கடலையொட்டிப் புதிய துறைமுகம் ஒன்றையும், எரிவாயுச் சேமிப்புக் கிடங்கையும் வேகமாகக் கட்டியெழுப்பி வருகிறது துருக்கி. 2023 இல் அங்கேயிருந்து எடுக்கப்படும் எரிவாயு நாட்டின் எரிவாயுக் குளாய்களுடன் இணைக்கப்படும். 2025, 2026 ம் வருடத்தில் அங்கேயிருந்து சுமார் 20 மில்லியன் தொன் எரிவாயுவை உறிஞ்சியெடுக்க முடியும் என்றும் அது துருக்கியின் எரிவாயுத் தேவையை முழுவதுமாகத் திருப்திசெய்யும் என்றும் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

2025, 2026 ம் ஆண்டுகளிலேயே அதை ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பிக்கலாம் என்று துருக்கி கணக்குப் போடுகிறது. உத்தியோகபூர்வமாக சுமார் 80 % பணவீக்கத்தை எட்டியிருக்கும் துருக்கியின் பொருளாதாரம் சில வருடங்களாகவே பாதாளத்தை நோக்கிச் சரிந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் தமது பொருளாதாரம் பலமாக நிமிரும் என்று துருக்கி எதிர்பார்க்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *