தென்னாபிரிக்க ஸுலு மக்களின் அரசனாக மிஸுஸுலு காவேலிதினி அங்கீகாரம் பெற்றார்.
தென்னாபிரிக்காவின் ஐந்திலொரு பகுதி மக்கள் ஸுலு இனத்தவராகும். சுமார் 11 மில்லியன் தொகையான அவர்களின் அரசனாக இருந்த குட்வில் ஸ்வேலிதினி இவ்வருடம் மார்ச் மாதத்தில் மறைந்தார். 1971 ம் ஆண்டு முடிசூடிக்கொண்ட அவரின் மறைவின் பின்னர் அரசனாக யார் வருவது என்பதிலிருந்த சர்ச்சையைத் தீர்த்து ஜனாதிபதி சிரில் ரமபோசா மகன் மிஸுஸுலு காவேலிதினியை ஸுலுக்களின் மன்னராக அங்கீகாரம் செய்துவைத்தார்.
இறந்துவிட்ட ஸுலு அரசன் குட்வில் ஸ்வேலிதினிக்கு மனைவியர்களும் அவர்கள் மூலமாகப் பிறந்த பிள்ளைகளும் பலர். அவர்களில் முதன் முதலாகப் பிறந்தவர் சிம்காடே காவேலிதினி. அவரது தாய் பட்டத்து ராணியல்ல. ஆயினும், முதலாவதாகப் பிறந்ததால் தானே அரசகட்டிலுக்குச் சொந்தக்காரன் என்று சிம்காடே காவேலிதினி தனக்கு ஆதரவானவர்களுடன் சேர்ந்து ஸுலு அரசனாகத் தன்னைப் பிரகடனம் செய்திருக்கிறார்.
தென்னாபிரிக்காவின் உயர்நீதிமன்றத்துக்குச் சென்று சிம்காடே காவேலிதினி தனது பட்டத்து உரிமையைக் கோரினார். நீதிமன்றம் மிஸுஸுலு காவேலிதினியை மன்னராகப் பிரகடனம் செய்துவைக்கும்படி நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு உத்தரவிட்டது. அதையடுத்து ஸுலு மக்களின் மிகப்பெரிய கொண்டாட்டமொன்றில் 48 வயதான அவர் முடிசூடிக்கொண்டார்.
“இந்தச் சரித்திரபூர்வமான நிகழ்வு வாழ்வில் ஒருமுறைதான் நடக்கும். அடுத்த தடவை இது நடக்கும்போது எங்களில் பலர் உயிருடன் இருக்கமாட்டோம். எங்கள் அரசன்தான் உத்தியோகபூர்வமான ஒரேயொரு அரசன். அவர்தான் ஸுலு தேசத்தின் தலைவன்,” என்று சிரில் ரமபோசா குறிப்பிட்டு வாழ்த்தினார்.
ஸுலு மக்களின் அரசனுக்கு சட்டபூர்வமான அதிகாரங்கள் எதுவும் கிடையாது. அந்தப் பதவி ஸுலு மக்களிடையே பலமாக மதிக்கப்படுகிறது. அவர்களுடைய பாரம்பரியங்களில் மன்னரின் சொல்லுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்