தென்னாபிரிக்க உள்ளூராட்சித் தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பெருமளவில் பின்னடைவு.

தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்களின் விடுதலைக்குப் போராடியதாகக் குறிப்பிடப்படும் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே படிப்படியாகத் தனது பலத்தை இழந்து வருகிறது. மத்தியில் ஆட்சியிலிருந்து வரும் அக்கட்சி இவ்வார ஆரம்பத்தில் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு நடந்த தேர்தலில் முதல் தடவையாக 50 % க்கும் குறைவான அளவிலேயே வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

சமீப வருடங்களில் அடுக்கடுக்காக வெளியாகிவரும் ஆளும் கட்சித் தலைவரிகளின் லஞ்ச ஊழல்கள், நகரங்களில் மின்சார, நீர்த்தேவையை பூர்த்தி செய்ய முடியாமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவை அக்கட்சி மீதான நம்பிக்கையை மக்களிடையே பெருமளவில் பலவீனப்படுத்தி வருகின்றன.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் தேர்தல்களில் 54 விகித வாக்குகளை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி பெற்றபோது அது பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. இத் தேர்தலிலேயோ அக்கட்சி வெறும் 46 % வாக்குகளையே பெற்றிருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியான வெள்ளை இனத்தவர் பலரால் பிரதி நிதித்துவப்படுத்தப்படும் ஜனநாயக் கூட்டணியும் ஓரளவு பின்னடைவுடன் 22 % வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இடதுசாரிக் கட்சியான பொருளாதார விடுதலைப் போராளிகள் கட்சி ஓரளவு முன்னேறிப் பத்து விகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

ஆளும் கட்சியைக் கடுமையாகத் தாக்கி வரும் பொருளாதார விடுதலைப் போராளிகள் கட்சித் தலைவர் ஜூலியஸ் மலேமா “நாம் அந்த யானையைக் கொஞ்சம் கொஞ்சமாக முழுங்குவோம்,” என்று குறிப்பிட்டார். ஆபிரிக்க தேசியக் கட்சியின் உயர்மட்டத்தினரோ, “நாம் தோல்வியடைந்த கட்சியல்ல. வாக்காளர்கள் எங்களை ஆதரிக்காவிட்டாலும் நாம் அவர்களுக்காகப் பாடுபடுவோம்,” என்று குறிப்பிட்டார்.

நாட்டின் உள்ளூராட்சி மன்றங்களின் 213 பிரதி நிதிகளில் 161 ஐ ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி கைப்பற்றியிருக்கிறது. எனவே அக்கட்சியினர் தொடர்ந்தும் பெருமளவில் அதிகாரம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். நாட்டின் பெரிய நகரங்களான பிரிதோரியா, ஜோஹான்னஸ்போர்க் நகரங்களில் கட்சி பெருமளவில் தன் வாக்காளர்களை இழந்திருக்கிறது.

2024 இல் தென்னாபிரிக்காவில் பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறது. அத்தேர்தலில் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ், ஜனாதிபதி சிரில் ரம்போஸா ஆகியோரின் நிலை பெருமளவில் பலவீனமாக இருப்பதையே நடந்த தேர்தலின் விளைவுகள் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தினர் கணிக்கின்றனர்.

சாள்ஸ் ஜெ. போமன்