சியர்ரா லியோனேயின் தலைநகரில் தொட்டிவண்டி வெடித்து நூற்றுக்கும் அதிகமானோர் இறப்பு.

மேற்கு ஆபிரிக்க நாடான சியர்ரா லியோனேயின் தலைநகரான ப்ரீடௌனில் நடந்த வீதி விபத்தொன்றின் விளைவாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. எரிநெய்யை ஏற்றிச் சென்ற தொட்டிவண்டி ஒன்று லொறியொன்றுடன் மோதியது. 

மோதிய தொட்டிவண்டி ஓட்டையால் எரிநெய் வெளியேற ஆரம்பித்தது. அதைத் தமது கொள்கலன்களில் பிடித்துக்கொள்ள பல நூறுபேர் அவ்விடத்தில் திரண்டார்கள். அச்சமயத்தில் கசிவொன்றினால் வெளியேறிய எரிநெய் தீப்பிடித்து பெரும் நெருப்புக் கோளமாக வெடித்தது. ஒரு எரிநெய் நிலையமே வெடித்ததாகக் கருதப்படக்கூடிய அந்தத் தீக்கோளத்துக்குள் அங்கே திரண்டிருந்தவர்கள் இழுக்கப்பட்டார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

வெல்லிங்டன் என்ற குடியிருப்புப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அப்பகுதியின் செஞ்சிலுவைச் சங்கத்தினர் எண்பது பேர் இறந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். நகர மருத்துவசாலையின் பிணங்களைப் பாதுகாக்கும் நிலையத்தினர் தாம் ஏற்கனவே 90 இறந்த உடல்களை விபத்திலிருந்து பெற்றதாகக் குறிப்பிடுகிறார்கள்.

உண்மையில் இறந்தவர்கள் தொகை மேலும் அதிகரிக்கும் என்று விபத்து நடந்ததைக் கண்ட சாட்சிகள் குறிப்பிடுகிறார்கள். நெருப்புக்காயம் பட்டவர்களில் பெரும்பாலானோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

விபத்து நடந்தபோது எடுக்கப்ப்ட்ட படங்களும், குறும்படங்களும் சமூகவலைத்தளங்களில் பரவியிருக்கின்றன. பலவும் மிகவும் அகோரமான ஒரு விபத்தையே காட்டுகின்றன. மீட்புப்படை விபத்து நடந்த இடத்தில் தனது பணிகளை முடித்துவிட்டதாகவும் தற்போது அவ்விடத்தில் சுத்திகரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் நகர ஆளுனர் யுவோன் அகி சவர் தெரிவிக்கிறார். 

சாள்ஸ் ஜெ. போமன்