கடுமையான உள்நாட்டு விமர்சனங்களுக்கிடையே சீனாவுக்குப் பறந்த ஒலொவ் ஷொல்ட்ஸ்.
வியாழனன்று சீனாவுக்குப் பயணமாகிறார் ஜேர்மனியின் பிரதமர் ஒலொவ் ஷொல்ட்ஸ். வெள்ளியன்று காலையில் அவர் சீனாவின் கொம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஷீ யின்பிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தவிருக்கிறார். “நாம் சீனாவுடனான உறவுகளில் வேறு பாதைக்கு மாற்றிக்கொள்ளவேண்டும். சீனா தனது போக்கில் மாறினால் அதற்கேற்ப நாமும் மாறிக்கொள்ளவேண்டும். சுமார் ஐந்து, பத்து வருடங்களுக்கு முன்னாலிருந்த சீனா இப்போது இல்லை,” என்று தனது விமர்சகர்களுக்குப் பதிலளிக்கும் ஷொல்ட்ஸ் ஜேர்மனியின் வெளிநாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகளைப் பேணுவதில் பெரும் ஆர்வமுள்ளவராகும்.
சீனாவுடனான ஜேர்மனியின் தொடர்புகள் இனிமேல் எப்படியாக மாறக்கூடுமென்று ஷொல்ட்ஸ் விளக்கவில்லை. தற்போது ஜேர்மனியின் அதி முக்கிய வர்த்தகத் தோழனாக இருக்கும் சீனாவுடனான வர்த்தகத்தைத் தொடரவேண்டும் என்று குறிப்பிடும் ஷொல்ட்ஸ் தனது நாட்டின் நிறுவனங்கள் சீனாவில் வெவ்வேறு வர்த்தக மார்க்கங்களைத் தொடரும் வழிகளை அரசு செய்துகொடுக்க வேண்டும் என்கிறார். அதற்காகத் தனது விஜயத்தின்போது பல முக்கிய ஜேர்மனிய நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகளாலான குழுவினரையும் கூட்டிச் செல்கிறார்.
இதுவரை ஜேர்மனியும், ஐரோப்பாவும் சீனாவில் தயாரிக்கப்படும் பல பொருட்களுகளைத் தமது நாட்டின் தொழிற்சாலைகள், மருத்துவ சேவை ஆகியவற்றுக்கு மிகப்பெரிய அளவில் நம்பியிருக்கிறார்கள். அந்த நிலை மாறி சீனாவுடன் எதற்கும் முழுவதுமாக நம்பியிருக்கலாகாது என்று ஷொல்ட்ஸ் குறிப்பிட்டு வருகிறார். அவருடன் பயணமாகும் நிறுவனங்கள் சமீப காலத்தில் சீனாவுடனான வர்த்தகத்தை பரவுபடுத்தவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தன.
தான் சீனாவின் தலைவர்களுடன் உரையாடும்போது மனித உரிமைகள் பேணல், ரஷ்யாவின் போரைக் கண்டித்தல் போன்ற சர்ச்சைக்குரிய விடயங்களைத் தொடவிருப்பதாகவும் ஷொல்ட்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்