இளநீர் என்ற விபரத்துடன் சரக்குக்கப்பலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது சுமார் 1 பில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருள்.
போதை மருந்துக் கடத்தல்காரரைக் கண்டுபிடிக்கச் சர்வதேச ரீதியில் நடக்கும் கூட்டுறவு அமைப்பினர் ஒருவருக்கொருவர் கொடுத்த துப்புகளின் விளைவால் ஹொங்கொங்கிற்கு வெளியே மிகப்பெரிய அளவிலான போதைமருந்து கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஹொங்கொங்கில் செயற்படும் ஆஸ்ரேலிய பொலீசாரும், எல்லைக்காவல் படையினரும் சேர்ந்து “ஐஸ்” என்று அழைக்கப்படும் அந்தப் போதைப்பொருள் சரக்கைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
மெக்ஸிகோவின் அதிகாரிகள் ஹொங்கொங் பொலீசாருக்குக் கொடுத்த துப்பு மூலமே ஆஸ்ரேலியாவுக்குக் ஹொங்கொங் வழியாகக் கொண்டுசெல்லப்பட இருந்த அந்தப் போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இளநீர் என்று எழுதியிருந்த அந்தச் சரக்குகள் திரவங்களை அடைக்கும் சிறு பெட்டிகளுக்குள் நிரப்பப்பட்டிருந்தது. 1.8 தொன் நிறையான அதன் விற்பனைப் பெறுமதி ஒரு பில்லியன் டொலர்களை விட அதிகமானதாகும்.
ஆஸ்ரேலியாவுக்குக் கொண்டு செல்லப்படும் போதை மருந்துகளைக் கடத்துபவர்கள் அதன் மூலம் சம்பாதிக்கும் தொகையை வைத்து தமது நாட்டின் குற்றவியல் குழுக்களை நிர்வகித்து வருவதாக மெக்ஸிகோவின் துப்பறியும் அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். அத்தகைய வியாபாரம் நாட்டின் பாதுகாப்புக்கும், நாட்டு மக்களின் பாதுகாப்புக்கும் மிகப்பெரும் இடையூறாக விளங்குவதாக அவர்கள் விபரிக்கிறார்கள்.
கைப்பற்றப்பட்ட போதைமருந்து யாரிடமிருந்து எங்கே சென்றது, அதைத் தயாரித்து விற்பவர்களின் விபரங்கள் என்னவென்பதை அறியும் ஆராய்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஆஸ்ரேலிய பொலீசார் குறிப்பிட்டார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்