சுவீடன் நிலைப்பாட்டில் மாற்றம். நாட்டோவில் அங்கத்துவம், அணுகுண்டை வைத்திருக்க நாடு தயார்!

ஐரோப்பிய நாடுகளில் அணிசேரா நாடாகவும், தனது மண்ணில் அணுகுண்டை வைத்திருக்கவும் எதிர்த்து வந்த நாடுகளில் முக்கியமானது சுவீடன். உக்ரேன் மீது அணு ஆயுதத்தைப் போடுவதாக ரஷ்யா மிரட்ட ஆரம்பித்ததிலிருந்து சுவீடனின் நிலைப்பாடு தலைகீழாக மாறியிருக்கிறது. 

ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான் நாட்டோவில் அங்கத்துவம் கேட்பது என்று கண்களில் இரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டு நிலைப்பாட்டில் மாறியது சுவீடன். நாட்டின் அரசியல் கட்சிகள், மக்களிடையேயும் ஒரு பெரும் மனமாற்றமாக அது இருந்தது. நாட்டோவில் சேர்ந்தாலும் எங்கள் மண்ணில் அணு ஆயுதம் வைத்திருக்க மாட்டோம் என்ற நிலைப்பாடு சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் வரை சுவீடனில் இருந்தது.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் சுவீடனின் இராணுவம் நாட்டோ அங்கத்துவம் பற்றிய தனது ஆராய்வுக்கு அறிக்கையை வெளியிட்டது. நாட்டின் இராணுவ உயர் தளபதி அதில், “தற்போதைய நிலைமையில் சுவீடன் நாட்டோ அமைப்பில் சேர்வதற்கான அடிப்படைக் கோரிக்கைகள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். எங்களுக்காகச் சில பிரத்தியேக சலுகைகளையும் வேண்டிக்கொள்ளலாகாது,” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் பதவியிலிருந்த சுவீடனின் பெரிய கட்சியான சோசியல் டெமொகிரட்டிக் கட்சியினர் அது பற்றி இராணுவத் தலைமை தம்மிடம் இதுவரை கலந்தாலோசிக்கவில்லை என்று குற்றங்கூறியது. ஆயினும், ஆட்சியிலிருக்கும் கட்சியைச் சார்ந்த  புதிய பாதுகாப்பு அமைச்சர் இராணுவத் தலைமையின் சிபாரிசுவைத் தான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *