“அரசியல் கோட்பாட்டு விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு உதைபந்தாட்டத்தில் கவனம் செலுத்துங்கள், என்கிறது FIFA.

கத்தாரில் விரைவில் ஆரம்பிக்கவிருக்கும் சர்வதேச உதைபந்தாட்டக் கிண்ணக் கோப்பைப் போட்டிகள்,  அந்த நாட்டின் மனித உரிமை, வெளிநாட்டுத் தொழிலாளர் நிலைமை போன்றவைகள் மீது பெரும் கவனத்தைத் திருப்பியிருப்பது அறிந்ததே. சமீபத்தில் வெவ்வேறு நாட்டுத் தேசியக் குழுக்களும் அதுபற்றிய விமர்சனங்களைத் தெரிவித்திருக்கின்றன. அதைக் கருத்தில் கொண்டு “கத்தாரில் உதைபந்தாட்டத்தின் மீது கவனம் செலுத்துங்கள், அரசியல், கோட்பாடுகளைப் பற்றிப் பேசிக் கவனத்தைச் சிதறவிடாதீர்கள்,” என்ற வேண்டுதலை FIFA அமைப்பு அங்கே பங்கெடுக்கும் 32 நாடுகளுக்கும் அனுப்பியிருக்கிறது.

“பல தரப்பினரிடமிருந்தும் வரும் கருத்துக்களையும், எண்ணங்களையும் நாங்கள் மதிக்கிறோம். எவருக்கும் தார்மீக நெறிகள் பற்றி நாம் கற்பிக்க முயற்சி செய்வதில்லை,” என்று [FIFA] சர்வதேச உதைபந்தாட்ட நெறியாளர் அமைப்பின் தலைமை நிர்வாகி ஜியானி இன்பண்டினோவும், பொதுச் செயலாளர் பத்மா சமௌராவும் அந்தக் கடிதத்தில் அங்கத்துவ நாடுகளுக்கு எழுதியிருக்கிறார்கள்.

2021 இல் த கார்டியன் எழுதிய விபரங்களின்படி கத்தார் உலகக் கிண்ணத்துக்கான போட்டிகளை நடத்துவது தீர்மானிக்கப்பட்ட  2010 ம் ஆண்டின் பின்னர் கத்தாரில் தொழில் வாய்ப்புத் தேடி வந்த சுமார் 6,500 தொழிலாளர்கள்  இறந்திருக்கிறார்கள். அவர்கள் நேபாளம், சிறீலங்கா, இந்தியா, பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்களாகும். குறிப்பிட்ட தொழிலாளர்கள் எல்லாருமே உலகக்கோப்பை நிகழ்ச்சிகளுக்கான கட்டுமான வேலைகளின் போது இறக்கவில்லை என்கிறது கத்தார். 2014 – 2020 வரை அக்கட்டுமான வேலைகளில் இறந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 37 பேர் மட்டுமே என்கிறது கத்தார்.

கத்தாரில் விளையாடும் டென்மார்க் வீரர்கள் உடைகளைத் தயாரிக்கும் Hummel  நிறுவனம் அவர்களுக்காக ஒரு வெளிறிய நிற உடைகளையே வடிவமைத்திருக்கிறது. தாம் தமது நாட்டின் தேசிய அணியை ஆதரித்தாலும் கத்தாருக்குத் தமது ஆதரவில்லை என்கிறது அந்த நிறுவனம்.

உலகக் கோப்பைப் போட்டிகள் நடப்பதைக் காரணமாக வைத்துத் தமது நாட்டின் தொழிலாளர் நலச் சட்டங்களை மேம்படுத்தியிருப்பதாக கத்தாரில் போட்டிகளை நடத்தும் நிறுவனர்களின் சார்பாக டென்மார்க்குக்குப் பதிலளிக்கப்பட்டிருக்கிறது. கத்தார் சமீப வருடங்களில் தமது நாட்டில் தொழிலாளர்களாக இருக்கும் வெளிநாட்டவர்களின் நலன்களை மேம்படுத்தும் மாற்றங்கள் சிலவற்றைக் கொண்டுவந்திருக்கிறார்கள் என்றும் அது போதாது என்றும் உலகத் தொழிலாளர்கள் அமைப்பானது சமீபத்தில் தெரிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *