மீதமிருக்கும் இரண்டு ஆட்சி வருடங்களில் அமெரிக்காவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் முடிவுகள் அமெரிக்காவில் வெளியாகி வருகின்றன.
அமெரிக்காவின் ஜனாதிபதி ஆட்சியின் இடைத்தவணைத் தேர்தல்கள் நவம்பர் 08 ம் திகதி நடந்தேறின. பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளில் ஒன்றான செனட் சபையின் 35 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபைக்கான 435 இடங்களுக்கும் மக்கள் வாக்களித்தார்கள். ஜோ பைடன் ஆட்சியின் மீதமிருக்கும் இரண்டு வருடங்களில் அவரால் தான் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முடியுமா என்பதற்குப் பதிலளிக்கும் இந்தத் தேர்தல்கள் அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பைப் பேணும் தேர்தல்கள் என்றும் குறிப்பிடப்பட்டன.
தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் டெமொகிரடிக் கட்சியினர் இந்தத் தேர்தலின் பின்னர் இரண்டிலுமே தமது பெரும்பான்மையை இழக்கக்கூடும் ஆபத்து இருப்பதாக தேர்தல் கணிப்புகள் காட்டி வந்திருந்தன. வழக்கமாகவே இந்த இடைத்தவணைத் தேர்தலின்போது ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு எதிராகவே அமெரிக்க மக்கள் வாக்களிப்பதுண்டு. எனவே, இரண்டு சாராரும் தமது முழுப் பலத்தையும் பிரயோகித்து வாக்கு வேட்டைகள் நடத்தினர். எந்த ஒரு தேர்தலுக்கும் செலவிடப்படாத அளவு தொகை இந்தத் தேர்தலில் விளம்பரங்களுக்காகச் செலவிடப்பட்டதாகத் தெரியவருகிறது.
ஐரோப்பாவின் அதிகாலைவரை திறந்திருந்தன அமெரிக்கத் தேர்தல் சாவடிகள். அதனால் ஐரோப்பாவின் காலையிலேயே தேர்தல் முடிவுகள் வேகமாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. கருத்துக் கணிப்பீடுகள் சொன்னது முழுவதும் உண்மையாகிவிடவில்லை. டெமொகிரடிக் கட்சியினர் எதிர்பார்த்த அளவைவிடக் கூடுதலான அளவில் வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள்.
வெளிவந்திருக்கும் முடிவுகளின்படி பிரதிநிதிகள் சபையின் பெரும்பாலான இடங்களை ரிபப்ளிகன் கட்சியினரே கைப்பற்றி வருகிறார்கள். 218 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மையையை அச்சபையில் பெறவேண்டும். இதுவரை அக்கட்சியினர் 194 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். ஆளும் கட்சியான டெமொகிரடிக் கட்சியினரோ 166 இடங்களையே பெற்றிருக்கிறார்கள். செனட் சபையின் தேர்தல் முடிவுகள் சில இடங்களில் மயிரிழை வித்தியாசத்திலிருக்கும் என்று கணித்தபடியே நடந்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்