மியான்மாரின் நிலைமையை மாற்ற முயற்சிசெய்வதை நிறுத்த ஆசியான் அமைப்பு தமக்குள் இரகசிய முடிவு.
நாட்டில் ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய மியான்மாரின் இராணுவம் தொடர்ந்தும் தனது கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வருகிறது. அவர்களுடன் உரையாடி மீண்டும் நாட்டில் மக்கள் அரசை ஏற்படுத்தும் முயற்சிகளைத் தொடர்வதில்லை என்று தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டுறவு அமைப்பான ஆசியான் முடிவுசெய்திருக்கிறது. அதை அவர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தங்களிடம் அந்த விபரங்களுடனான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக மனித உரிமை அமைப்பான Fortify Rights அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
மியான்மாரின் இராணுவ ஆட்சியின் பிரதிநிதிகளை ஆசியான் அமைப்பின் மாநாடுகளில் கலந்துகொள்ள அவ்வமைப்பின் மற்றைய நாடுகள் ஏற்றுக்கொள்ளாமலிருந்து வந்தன. ஆயினும் அந்த அமைப்பின் 10 நாடுகள் வெவ்வேறு வகையில் மியான்மார் இராணுவத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அதை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், ஒப்புக்கொண்டபடி மியான்மாரில் தனது மக்களை நல்ல முறையில் கையாளவில்லை. வெவ்வேறு பகுதிகளில் இராணுவம் சாதாரண மக்களைக் குறிவைத்துத் தாக்கிச் சித்திரவதை, கொலை ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கிறது.
ஒக்டோபர் மாதத்தில் நடந்த ஆசியான் அமைப்புக் கூட்டமொன்றில் “இனிமேல் மியான்மாருடன் நாட்டில் அமைதியை உண்டாக்கும்படி பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதில்லை. மியான்மார் எங்கள் அமைப்பில் இருப்பதே ஆசியானுக்குப் பாதுகாப்பானது, பலத்தைத் தருவது,” என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
Fortify Rights அமைப்பின் கைகளில் கிடைத்திருக்கும் ஆசியான் அமைப்புக் கூட்டத்தில் முடிவான விபரங்கள் ஆசியான் அமைப்பு மீண்டும் மியான்மார் இராணுவத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி அதில் தோல்வியுறுவதில் அர்த்தமில்லை என்று நம்புவதாகக் காட்டுகிறது. அவர்களின் நிலைப்பாடானது மியான்மார் மக்களின் நிலைமையை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை அல்லது உதாசீனப்படுத்துகிறார்கள் என்று காட்டுவதாகவே அமைந்திருக்கிறது என்கிறது அந்த மனித உரிமைகள் அமைப்பு.
சாள்ஸ் ஜெ.போமன்