அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் முதலாவது பெண் சபாநாயகர் அவ்விடத்தை முதலாவது கறுப்பினத்தவரிடம் கையளிக்கிறார்.
டெமொகிரடிக் கட்சியினரிடையே மட்டுமன்றி அமெரிக்காவின் அரசியல் வட்டாரத்திலேயே பெரும் மதிப்பையும், பலத்தையும் கொண்ட 82 வயதான நான்சி பெலோசி. அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக இரண்டு தவணைகள் கடமையாற்றியவர்.
கடந்த வாரம் நடந்த தேர்தல்களில் பிரதிநிதிகள் சபை டெமொகிரடிக் கட்சியினரிடம் இருந்து கைமாறியிருக்கிறது. பெரும்பான்மையைச் சபையில் இழந்த கட்சியினரிடமிருந்து சபாநாயகர் பதவியை வென்றவர்கள் கைப்பற்றுவார்கள். அதன் பின்னர் சபையின் எதிர்க்கட்சித் தலைமை நான்சி பெலோசியிடம் இருக்கும். அந்த இடத்தை விட்டு விலகிக்கொள்ளும் பெலோசி அதை ஹக்கீம் ஜெப்ரீஸ் என்ற பிரதிநிதியிடம் கையளிக்கிறார். ஜெப்ரீஸ் அப்பதவியை ஏற்கும் முதலாவது கறுப்பின அமெரிக்கராகும். அவர் சபையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பார்.
பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் செயற்படவிருக்கும் பெலோசி மற்றவர்களுக்கு ஆலோசனைகள் கொடுப்பதற்குத் தனது நேரத்தை முதன்மையாகச் செலவிடுவார். அவரது கணவர் போல் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக அரசியல் பின்னணியுள்ள காரணத்துக்காக அவர்களுடைய வீட்டுக்குள் நுழைந்த ஒருவனால் தாக்கப்பட்டார். நீண்ட காலமாகவே பெலோசியைக் குறிவைத்துத் தாக்குதல் நடக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
ரிபப்ளிகன் கட்சியினர் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக கெவின் மக்கார்த்தியைத் தெரிந்தெடுத்திருக்கிறார்கள். ஜனவரி 03 ம் திகதி அவர்கள் அச்சபையைப் பொறுப்பேற்கும்போது அவர் சத்தியப்பிரமாணம் செய்வார்.
சாள்ஸ் ஜெ.போமன்