சர்வதேச உதைபந்தாட்ட ஒன்றியத்தின் தலைவர் கத்தார் மீதான ஐரோப்பியரின் விமர்சனங்களைப் பாசாங்குத்தனம் என்று சாடினார்.
நவம்பர் 20 ம் திகதி, ஞாயிறன்று ஆரம்பமாகவிருக்கிறது உலகெங்கும் வாழும் உதைபந்தாட்ட விசிறிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கான மோதல்கள். அதையொட்டிச் சனிக்கிழமையன்று கத்தாரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சர்வதேச உதைபந்தாட்ட ஒன்றியத்தின் தலைவர் ஜியான்னி இன்பன்டினோ கத்தாரின் மனித உரிமை மீறல்களை விமர்சித்து வரும் மேற்கு நாடுகளைக் கடுமையாகச் சாடினார்.
“இன்று நான் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ளவன் போல உணர்கிறேன், ஊனமுற்றவன் ஒருவனாக உணர்கிறேன், அன்னிய நாட்டிலிருந்து வந்த பணியாளனாக உணர்கிறேன். ஒழுங்குமுறைகள் எப்படியிருக்க வேண்டும் என்று ஒரு பக்கச் சார்பாகப் போதித்து வருவது வெறும் பாசாங்குத்தனம்……..” என்று தனது உரையை ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகளைக் கடும் வார்த்தைகளால் சாடினார் இன்பன்டினோ.
இத்தாலியரான தான் சுவிஸ் நாட்டின் பாடசாலையில் படிக்கும்போது எப்படி அன்னியனாக ஒதுக்கப்பட்டுத் தனது காலத்தைக் கழிந்தேன் என்று கத்தாரை விமர்சிப்பவர்கள், கத்தாரை ஒருபக்கச் சார்பாக வேண்டுமென்றே பழிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக உலகின் மற்ற நாடுகளைச் சுரண்டி, அடிமைப்படுத்தியதற்காக ஐரோப்பாவே மற்றவர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று இன்பன்டினோ வாதித்தார்.
சர்வதேச உதைபந்தாட்ட ஒன்றியத்தின் தலைவரின் வார்த்தைகள் பலரின் விமர்சனத்தைப் பெற்றது. உதைபந்தாட்ட ஒன்றியத்தின் நடவடிக்கைகளைப் பல தடவைகள் மறைத்துப் பொய்களைப் பரப்பியது, கத்தாரிடம் லஞ்சத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்காக ஒன்றியத்தின் கோட்பாடுகளை காற்றில் பறக்க விட்டமை போன்றவைகளை அவர் மற்றும் அவ்வமைப்பின் தலைமைக் குழுவின் அங்கத்துவர்கள் நிறைவேற்றி வருவதைப் பல தலைவர்கள் சாடினார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்