அமேஸான் நிறுவனத்தை ஆரம்பித்துவைத்த ஜெப் பேஸோஸ் தனது பெரும்பாலான சொத்துக்களைத் தானம் கொடுக்கவிருப்பதாக அறிவித்தார்.
தமது சொத்துக்களின் பெரும்பகுதியை நல்ல காரியங்களுக்காகத் தானம் கொடுப்பவர்களின் வரிசையில் சேர்ந்துகொள்பவர் ஜெப் பெஸோஸ். பில் – மெலிண்டா கேட்ஸ், வாரன் புவ்வர்ட், ஜோர்ஜ் சோரோஸ் போன்ற பல பில்லியனர்களைப் போலத் தனது சொத்துக்களில் பெரும்பகுதியைத் தனது வாழ்நாளுக்குள் மனிதாபிமான அமைப்புகள், சூழல் மேம்படுத்தல் போன்றவைகளுக்காகக் கொடுத்துவிடப்போவதாக அறிவித்திருக்கிறார் பேஸோஸ்.
1994 இல் புத்தகங்களை விற்பதற்கான இணையத்தளமாக ஆரம்பிக்கப்பட்ட அமெஸான் இன்று எல்லாப் பொருட்களையும் விற்று உலகின் மிகப்பெரிய இணையத்தள விற்பனையாளர்களில் ஒருவராகியிருக்கிறது. பெஸோஸின் சொத்து மதிப்பை சுமார் 124 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் ஆக்கி உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் நாலாவது இடத்தைக் கொடுத்திருக்கிறது.
பெஸோஸ் பல வருடங்களாகவே வெவ்வேறு நல்ல காரியங்களுக்காகப் பெரும் தொகைகளைக் கொடுத்து வருபவர், ஆனால், யாருக்கு அது கொடுக்கப்பட்டது என்பதை வெளியிடுவதில்லை. தனது நிறுவனத்தின் பங்குகளையே அவர் தானமாகக் கொடுத்து விடுகிறார். அதன் மூலம் அதைப் பெற்றுக்கொள்ளும் அமைப்பு சொத்து வரிகளின்றி விற்கலாம்.
தனது சொத்திலிருந்து வருடாவருடம் 10 பில்லியன் டொலர்களைப் பத்து வருடங்களுக்கு அவர்Bezos Earth Fund என்ற அமைப்புக்குக் கொடுப்பதாக உறுதி பூண்டிருக்கிறார். 2021 இல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனிதாபிமான அமைப்புக்கு அவர் 100 மில்லியன் டொலர்களைக் கொடுத்திருக்கிறார். தலைக்குமீது கூரையின்றி வாழ்பவர்களுக்கு உதவும் அமைப்பு ஒன்றுக்காக அவர் வருடாவருடம் 100 மில்லியன் டொலர்களைத் தானம் செய்து வருகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்