உலகக்கோப்பை மோதல்களில் நேற்றைய ஏமாற்றம் ஆர்ஜென்ரீனா, இன்று தொடர்ந்தது ஜேர்மனி.
புதன்கிழமை தனது விசிறிகளை ஏமாற்றிய தேசிய அணி ஜேர்மனியுடையதாகும். கத்தார் காலிபா அரங்கில் ஜப்பான் தனது முதலாவது மோதலில் ஜேர்மனியைச் சந்தித்தது. சர்வதேச உதைபந்தாட்ட அமைப்பின் கணிப்பில் 11 வது இடத்தில் ஜேர்மனியும் 24 வது இடத்தில் ஜப்பானும் இருக்கின்றன. உலகக்கோப்பையை வென்றெடுக்கக்கூடிய அணிகளில் ஒன்றாக ஜேர்மனி பலரால் கணிக்கப்பட்டிருக்கிறது.
மோதலில் ஆரம்பத்தில் ஜேர்மனிய அணியினரின் விளையாட்டு அவர்கள் பற்றிய எதிர்பார்ப்பை நிறைவேற்றக்கூடியதாகவே இருந்தது. 30 நிமிட விளையாட்டில் ஜேர்மனி 1 – 0 என்று முன்னேறியிருந்தது. மேலுமொரு 10 நிமிடத்தில் ஜேர்மனியின் காய் ஹாவர்ட்ஸ் ஜப்பானின் வலைக்குள் போட்ட பந்துக்கு 2 – 0 கிடைக்கவில்லை.
மோதலின் இரண்டாம் பாகம் ஜேர்மனியின் 1 – 0 உடன் ஆரம்பித்தது. மோதல் முடிவை நெருங்க நெருங்க ஜப்பான் தனது பக்கத்தைப் பலமாக இறுக்கிக்கொண்டு ஜேர்மனியின் அரணை உடைத்துக்கொண்டு நுழைய ஆரம்பித்திருந்தது. அவர்களின் விளையாட்டிலும் புது உற்சாகம் பிறந்திருந்தது. 78, 83 நிமிடங்களில் ஜப்பான் அணி திடீரென்று 2 – 1 என்ற எண்ணிக்கையில் முன்னேறியிருந்தது.
ஜப்பான் அணியைப் பற்றிச் சரியான கணக்குப் போடாததன் பயனை ஜேர்மனி அனுபவித்திருக்கிறது. நேற்று அதே தவறை ஆர்ஜென்ரீனா செய்திருந்தபோதும் ஜேர்மனி தப்புக்கணக்குப் போட்டுவிட்டது.
“சவூதி அரேபியாவின் வெற்றி எங்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்திருந்தது. இது என் வாழ்வின் முக்கியமான நாள். எங்கள் அணியில் அப்படியொரு உற்சாகம் பொங்கியிருந்தது,” என்று பெருமையுடனும் உற்சாகத்துடனும் மோதலுக்குப் பின்னர் பேட்டி கொடுத்தார் ஜப்பானிய அணியைச் சேர்ந்த கௌரு மித்தமா.
சாள்ஸ் ஜெ. போமன்