தேர்தலின் பின்னர் ஏற்பட்ட இழுபறிகள் முடிந்து மலேசியாவின் பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்-

நவம்பர் 19 ம் திகதியன்று நடந்த தேர்தலின் பின்னர் மலேசியாவின் அரசியல் சட்டப்படி சகல கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் உரையாடிவிட்டு அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியான சீர்த்திருத்த முன்னணியின் [Pakatan Harapan ] தலைவர் அன்வர் இப்ராஹிமைப் பிரதமராகும்படி அழைத்திருக்கிறார். வியாழனன்று மாலை 17.00 மணிக்கு அவர் நாட்டின் பத்தாவது பிரதமராகச் சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்-

நீண்ட காலமாக மலேசிய அரசியலில் பங்குபற்றிய அன்வர் இப்ராஹிம் இரண்டு அரசாங்கங்களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 1970 களிலேயே நாட்டின் இளைஞர்களை ஒன்றுபடுத்திச் சமூக மாற்றங்கள் வேண்டும் என்று குரல்கொடுத்துப் பிரபலமானவர் அன்வர் இப்ராஹிம். நாட்டின் பிரதமராக இருந்த மஹாதிர் முஹம்மது அவரைத் தன்னுடைய கட்சிக்குள் இழுத்துக்கொண்டார். அங்கே பட்டத்து இளவரசன் என்ற இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர் நிதியமைச்சர், உப பிரதமர் பதவிகளையும் ஏற்றார்.

பொருளாதார வளர்ச்சியைப் பல வருடங்களாக அனுபவித்த மலேசியா உட்பட்ட ஆசிய நாடுகளில் வளர்ச்சியில் 1990 கடைசி வருடங்களில் வீழ்ச்சி ஏற்பட்டது. மலேசியாவில் அதற்காக அன்வரே காரணம் என்று குற்றஞ்சாட்டினார் பிரதமர் மஹாதிர் முஹம்மது. அன்வரின் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. 

கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட அன்வர் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் அதேபோன்ற குற்றச்சாட்டுகளால் சுமார் 10 வருடங்கள் சிறைக்குள்ளிருந்தார். 2018 இல் அவர் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் அரசியலுக்கு வந்து அவர் மஹாதிர் முஹம்மதுடன் சேர்ந்தார். பிரதம மந்திரி பதவியை அன்வரிடம் விரைவில் ஒப்படைப்பதாக மஹாதிர் உறுதியளித்தார்.

இரண்டாவது தடவையும் அன்வரிடம் பிரதமர் பதவி வரவில்லை. மலேசியாவின் முதன்மையான கட்சிகளிடையே ஏற்பட்ட இழுபறிகளினால் அரசாங்கம் குலைந்தது, கட்சிகள் உடைந்தன. பிரதமராக [2009 – 2018] இருந்து தற்போது சிறைக்குள் தள்ளப்பட்டிருக்கும் நஜீப் ரசாக் ஊழல்கள் வெளியாகின. அரசியல் சச்சரவுகளுக்குள் அன்வர் மீண்டும் பிரதமராகவில்லை.

தற்போதைய தேர்தலின் பின்னரும் பகிரங்கமாக அன்வர் இப்ராஹிமுடன் சேர்ந்து பாராளுமன்றப் பெரும்பான்மைக்கான ஆதரவு கொடுக்கத் தேவையான அளவு கட்சிகள் தயாராக இல்லை. இரகசியமாக அரசியல் பேரங்களே பேசப்பட்டன. எனவே மலேசிய அரசன் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாகச் சந்தித்து பேசிய பின்னரே அன்வர் இப்ராஹிமுக்குப் பெரும்பான்மை இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

“தேர்தலில் நீங்கள் எதையெதை இழந்தீர்களோ, வெற்றிபெற்றீர்களோ அதையெல்லாம் மறந்துவிட்ட எங்கள் நாட்டுக்காக ஒன்றுபடுங்கள். எங்கள் நாட்டுக்குத் தற்போது ஸ்திரமான பலமான, அரசியல் தளம்பலில்லாத அரசு அவசியம்,” என்று அரசன் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *