மரபணு மாற்றப்பட்ட கடுகை இந்தியாவில் பரீட்சார்த்தமாகப் பயிரிட அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் எண்ணெய்த் தேவைக்கான தன்னிறைவை [ஆத்மனீர்பார் பாரத் திட்டம்] அடைவதற்கான முயற்சியில் மரபணு மாற்றப்பட்ட கடுகுகளைப் பயிரிடுவதற்கு அரசின் மரபணுப் பயிரிடல் ஆராய்ச்சித் திணைக்களம் [Genetic Engineering Appraisal Committee] அனுமதி கொடுத்திருக்கிறது. தற்போதைய நிலைமையில் நாட்டில் உணவுத்தேவைக்கான எண்ணெயில் 55 – 60 % ஐ இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதிக்காகத் தங்கியிருப்பதிலிருந்து விடுபட இது அவசியம் என்று இந்திய அரசு நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைகளைப் பயிரிடுவதலுக்கான கோரிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் இந்தியாவின் உணவுத் தேவை அதிகரித்துக் கொண்டிருப்பதால் இறக்குமதியைக் குறைக்காத பட்சத்தில் அது நாட்டில் பணவீக்கத்தை ஏற்படுத்தி நாணய மதிப்பையும் குறைக்கும் என்றும் அரசு சுட்டிக் காட்டியிருக்கிறது.
இந்தியாவின் சுற்றுப்புற சூழல் அமைப்புகளும், சில விவசாய அமைப்புகளும் மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயிரிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அப்படியான விவசாயம் அப்பிராந்தியத்தில் வாழும் மற்றைய தாவரங்கள், விலங்குகளைப் பாதிக்கும் ஆபத்து இருப்பது சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
சர்வதேச ரீதியில் அமெரிக்கா, ஆஸ்ரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் மரபணு மாற்றப்பட்ட சில தாவர விதைகளைப் பாவித்து விவசாயத்தில் பரிசீலிப்பதற்கு அனுமதி கொடுத்திருக்கின்றன. தற்சமயம் rapeseed என்ற எண்ணெய் உணவில் பாவிக்கப்படும் எண்ணெய் விதைகளை விவசாயத்தில் பாவிப்பதில் பாரிய அளவில் கனடா முன்னணியில் நிற்கிறது. அங்கே 2021 இல் சுமார் 8.64 ஹெட்டேர் பிராந்தியத்தில் அந்த விதையைப் பயிரிட்டதில் பாதிப்புகள் எவையும் உண்டாகவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்