வானத்தில் பறந்த ஜப்பானை வீழ்த்தியது கொஸ்டா ரிக்கா, அடுத்து பெல்ஜியத்துக்குத் தீக்குளிப்பு.
தனது முதலாவது மோதலில் ஆனானப்பட்ட ஜேர்மனியையே உதைபந்தாட்டத்தில் வெற்றியெடுத்தது ஜப்பான். அதற்காக உலகெங்கும் பாராட்டுக்களைப் பெற்று முகில்களிடையே பறந்தது. ஞாயிறன்று அந்த மகிழ்ச்சியை உடைத்தெறிந்தது கொஸ்டா ரிக்கா அணி. அதற்கடுத்த மோதலில் பெல்ஜிய வீரர்களை 2 – 0 என்ற முடிவால் தீக்குள் குளிப்பாட்டினார்கள் மொரொக்கோ அனியினர்.
கத்தார் 2022 இல் இதுவரை நடந்த மோதல்களில் படு மோசமாகத் தோற்றவர்கள் என்ற அவப்பெயரைத் துடைத்தெறிந்தார்கள் கொஸ்டா ரிக்கா அணியினர். 23 ம் திகதி தமது முதலாவது மோதலில் ஸ்பெய்ன் அவர்களை எதிர்கொண்டது. அந்த மோதலின் முடிவு 7 – 0 என்று ஸ்பெய்னுக்குச் சாதகமானது. அந்தத் தலைகுனிவை ஜப்பானை 1 – 0 என்று வெற்றியெடுத்ததன் மூலம் உதைத்துத் தள்ளியிருக்கிறார்கள்.
பெல்ஜிய அணி இந்த முறை உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணியென்ற பாராட்டுக்களுடன் மோதல்களில் நுழைந்திருந்தது. தமது முதலாவது மோதலில் அவர்கள் கனடாவை 1 – 0 என்று வெற்றியெடுத்திருந்தார்கள். பலமற்ற அணியென்று கருதப்பட்ட கனடிய அணி அச்சமயத்தில் மிகவும் திறமையுடன் விளையாடி பெல்ஜியத்தை நிலைகுலைய வைத்ததுடன் பார்வையாளர்களிடையே பெரும் ஆதரவையும் அள்ளிக்கொண்டது.
மொரொக்கோவை நேரிட்ட பெல்ஜியம் இலகுவாக வென்றுவிடும் என்றே கணிக்கப்பட்டது. அவைகளைப் பொய்யாக்கி மொரொக்கோ 2 – 0 என்ற முடிவை உண்டாக்கிப் பார்வையாளர்களிடையே ஆதரவையும் பெற்றது. இரண்டாவது பாதி வரை 0 – 0 என்றே கடந்துகொண்டிருக்க மொரொக்கோ விளையாடிக்கொண்டிருந்த வீரரொருவரை மாற்றி அப்துல்ஹமீத் சபீரியை உள்ளே அனுப்பியது. அவர் வலைகாப்பவரின் வலது பக்கமாகத் தூரத்தில் நின்று உதைத்த பந்து கணிக்க முடியாத கோணத்தில் பறந்துவந்து வலைக்குள் விழுந்தது. அதேபோன்று மாற்றப்பட்டு உள்ளே வந்த இன்னொரு வீரர் ஸக்கரியா அப்துகலால் பெல்ஜியத்துக்கு எதிராக மேலுமொரு கோலைப் போட்டு 2 – 0 என்ற வித்தியாசத்தில் தனது அணிக்குப் பெருவெற்றியைக் கொடுத்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்