தோற்றும் வென்ற போலந்து. ஆர்ஜென்ரீனா, மெஸ்ஸி ரசிகர்களுக்கு மூச்சு வந்தது.
கத்தார் 2022 இல் புதன்கிழமையன்று நடந்த கடைசி இரண்டு உதைபந்தாட்ட மோதல்களும் “கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பானவை” என்ற சொற்றொடருக்கு முழுமையான அர்த்தத்தைக் கொடுத்தன. ஒரு பக்கம் ஆர்ஜென்ரீனா, போலந்துடன் மோதிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சவூதி அரேபியாவை வீழ்த்துவதில் முனைந்திருந்தது மெக்ஸிகோ அணி. அதற்கு முதல் நடந்த மோதல்களில் பிரான்ஸ், ஆஸ்ரேலியா ஆகியவை 16 அணி மோதல்களுக்குக் கடந்திருந்தன.
ஆர்ஜென்ரீனா இதற்கு முன்னர் விளையாடிய இரண்டு மோதல்களிலும் தனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருந்தது. போலந்துடன் விளையாடியபோது அதைத் தீர்த்து வைத்தது ஆர்ஜென்ரீன அணி. மெஸ்ஸியின் ரசிகர்களுக்குத்தான் அவர் கோல் போடுவதைக் காணக் கிடைக்கவில்லை. மோதலின் பெருமளவு நேரம் பந்து போலந்து பக்கம் தான் சுற்றிக்கொண்டிருந்தது, அத்தனைக்கு போலந்தின் விளையாட்டு சோர்வாக இருந்தது. போலந்து 0- 2 தோல்வியுடன் தப்பியதென்றால் அதன் பெருமை வலைக்காப்பாளர் Tomasz Szczęsny யே சாரும்.
சவூதி அரேபியாவும், மெக்ஸிகோவும் மிகவும் தீவிரமாக விளையாடினார்கள். ஏற்கனவே தனது விளையாட்டால், வெற்றியால் அராபிய ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்த சவூதிய அணியினர் சளைக்காமல் விளையாடிக்கொண்டிருந்தும் மோதல் முடியும் தறுவாயிலும் 0 – 2 என்ற நிலையில் இருந்தது சவூதி அரேபியா.
மெக்ஸிகோ தனது விளையாட்டின்போது தவறாக விளையாடியதற்காக ஏகப்பட்ட மஞ்சள் எச்சரிக்கை அட்டைகளைப் பெற்றிருந்ததால் மேலுமொரு கோல் போட்டால் அடுத்த கட்டத்துக்குப் போகலாம் என்ற நிலைமை இருந்தது. இல்லையேல் போலந்து தோற்றாலும் முன்னேறும் என்ற நிலைமை. அச்சமயத்தில் போலந்து – ஆர்ஜென்ரீன மோதல் முடிந்துவிட்டது. சவூதி அரேபியா – மெக்ஸிகோ மோதல் முடிய சுமார் 3 நிமிடங்கள் மிச்சமிருந்தது.
அச்சமயத்தில் சவூதி அரேபியாவின் சாலம் அல் டௌசாரி அழகாக மெக்ஸிகோவின் வலைக்குள் பந்தைப் போட்டு அந்தத் தென்னமெரிக்க நாட்டினரின் கனவுகளை உடைத்தெறிந்தார். அதன் மூலம் சவூதி அரேபியாவுக்கும் அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டாலும் கூட அவர்கள் தமது கௌரவத்தை மேலும் உயர்த்திக்கொண்டார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்