அரசு நாட்டின் உதைபந்தாட்டக் குழுவை இடையூறு செய்தால், துனீசியத் தேசியக் குழுவைப் போட்டியிலிருந்து விலக்குவதாக எச்சரிக்கை.

கத்தாரில் நடக்கவிருக்கும் சர்வதேச உதைபந்தாட்டக் கிண்ணத்துக்கான மோதல்களில் பங்கெடுக்கச் சித்தியடைந்த நாடுகளிலொன்று துனீசியா. அந்த நாட்டின் அரசாங்கம் நாட்டின் தேசிய உதைபந்தாட்ட அமைப்புக்குள் அரசியலை நுழைக்க முயன்றால் தேசியக் குழு மோதல்களில் பங்குபெறுவதைத் தடைசெய்வதாக சர்வதேச உதைபந்தாட்ட அமைப்பு [FIFA] எச்சரித்திருக்கிறது.

துனீசியாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் கமால் டெகூச்சே சமீபத்தில் சமீபத்தில் நாட்டின் உதைபந்தாட்டத்துறையின் முக்கிய நிர்வாகிகள் சிலரைப் பதவி விலக்குவதாக மிரட்டியிருக்கிறார். அத்துடன் தேசிய உதைபந்தாட்ட அமைப்பின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார். அதனால் எரிச்சலடைந்தே சர்வதேச உதைபந்தாட்ட அமைப்பு துனீசிய உதைபந்தாட்டத் தேசிய அதிகாரத்துக்கு எச்சரிக்கைக் கடிதமொன்றை அனுப்பியிருக்கிறது.

சர்வதேச உதைபந்தாட்ட அமைப்பு [FIFA] உலக நாடுகளில் தங்களுடன் செயற்படும் நிர்வாகிகளின் முடிவுகளில் அரசியல் நுழையலாகாது என்பதில் தெளிவாக இருக்கிறது. அந்தக் காரணத்தால் ஸிம்பாவ்வே, கென்யா ஆகிய நாடுகளின் தேசிய உதைபந்தாட்டக் குழுக்கள் சர்வதேச மோதல்களில் ஈடுபடுவதைத் தடுத்திருக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தேசியக் குழுவையும் தற்காலிகமாகத் தடை செய்திருந்தது.

பிரான்ஸ், ஆஸ்ரேலியா, டென்மார்க் ஆகிய நாடுகளுடன் நவம்பர் 22 ம் திகதி தனது மோதல்களை ஆரம்பிக்கவிருக்கிறது துனீசியாவின் தேசிய உதைபந்தாட்டக் குழு.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *