ஹிஜாப் பற்றிய சட்டங்களில் மாறுதல்கள் செய்யலாமா என்று ஈரான் ஆராயப்போகிறது.
தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஈரானின் பல பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அரசைச் சிந்திக்க வைத்திருக்கும் சாத்தியங்கள் தெரிகின்றன. ஈரானிய இளம் பெண்ணொருவர் சரியான முறையில் ஹிஜாப் அணிந்திருக்கவில்லை என்று கைதுசெய்யப்பட்டுக் காவலில் இறந்துபோனதால் வெடித்த போராட்டத்தை அரசு தொடர்ந்தும் தனது கடுமையான நடவடிக்கைகளால் அடக்க முயன்று வருகிறது. மக்கள் போராட்டம் பற்றிய விசாரணைகள் நடத்த ஐ.நா – வின் மனித உரிமைகள் அமைப்புக் கோரியதை ஈரான் மறுத்துவிட்டது.
பெண்கள் ஹிஜாப் எப்படி அணியவேண்டும் என்ற சட்டங்கள் பற்றி ஆராயப்போவதாக ஈரானிய நீதித்துறை அமைச்சர் முஹம்மது ஜவாத் மொன்ரசாரி குறிப்பிட்டிருக்கிறார். அதன் விபரங்கள் வெளியிடப்படப்படவில்லை. நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் பெண்களின் ஹிஜாப் எப்படி அணியப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், அதற்கேற்றபடி எப்படி மாற்றலாம் என்று ஆராயப்பட இருப்பதாக மட்டும் அமைச்சர் குறிப்பிட்டதாக ஈரானிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
ஈரானில் நட்சத்திர அந்தஸ்துள்ள மௌலவி அப்துல்ஹமீத் மக்களின் எதிப்புக்களுக்கு ஒரு முடிவைக் காணவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். “அரசின் கடந்த 43 வருடகால நடவடிக்கைகள் அவர்களின் அரசியல் கோட்பாட்டுக்கு ஒரு முடிவுக்குக் கொண்டுவந்திருப்பதையே மக்களின் குரல்கள் காட்டுகின்றன,” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
நாட்டின் தொலைக்காட்சியில் தோன்றிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அரசியலமைப்புச் சட்டங்களுக்கு முரண்படாத வகையில் ஹிஜாப் சட்டங்களை மாற்றலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதுவரை நடந்த மக்கள் போராட்டங்களில் அரச பாதுகாப்புப் படையினரால் ஆயிரக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள், கொல்லப்பட்டோர் நூற்றுக்கணக்கானோராகும்.
ஹிஜாப் பற்றி எழுந்த போராட்டத்தின் காரணம் ஈரானின் குர்தீஷ் ஒருத்தி இறந்ததாகும். அது குர்தீஷ் பிராந்தியத்தில் ஏற்கனவே இருந்துவரும் தனிநாடு கொள்கையைப் பலப்படுத்தியிருக்கிறது. மட்டுமில்லாமல் அவர்களுக்கான ஆதரவை ஈரானின் மற்றைய பகுதிகளிலும் அதிகப்படுத்தியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்