ஞாயிறன்று உக்கிரமாக உயிர்த்தெழுந்திருக்கும் இந்தோனேசியாவின் மிகப்பெரிய எரிமலை.
டிசம்பர் 04 ம் திகதியன்று காலையில் இந்தோனேசியாவின் பெரிய தீவான ஜாவாவிலிருக்கும் நாட்டின் மிகப்பெரிய எரிமலை வெடித்துப் புகையையும், குழம்பையும் கக்க ஆரம்பித்திருக்கிறது. அப்பிராந்தியத்தின் பெரும்பாலான போக்குவரத்துத் தொடர்புகள் முற்றாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. சாம்பலும், சிறிய கற்களுமாக எரிமலையின் சீற்றத்திலிருந்து வெளியாகியவை கட்டிடங்கள் மீது ஒரு படலமாகப் படிந்திருக்கின்றன.
செமரூ என்ற அந்த எரிமலையின் சீற்றம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என்று இந்தோனேசியாவின் இயற்றை அழிவு எச்சரிக்கைத் திணைக்களம் தெரிவித்திருக்கிறது. அந்த எரிமலையின் சுமார் அரை மைல் சுற்றுவட்டாரங்களில் எவரும் நடமாடலாகாது என்ற எச்சரிக்கை பிறப்பட்டிருக்கிறது. எரிமலை வெடிப்பினால் நில அதிர்வும் அதனைத் தொடர்ந்து சுனாமியும் உண்டாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
சுமார் 3,000 குடும்பங்களை அரசு ஏற்கனவே வேறு இடங்களுக்கு மாற்றியிருக்கிறது. இதுவரை அந்த எரிமலைச் சீற்றத்தால் எவரும் இறந்ததாகவோ, காயப்பட்டிருப்பதாகவோ தெரியவில்லை.
கிட்டத்தட்டச் சரியாக ஒரு வருடத்துக்கு முதலும் இதே எரிமலை சீற்றத்தை ஆரம்பித்திருந்தது. அதன் விளைவால் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் குன்றொன்று ஒரு கிராமத்தின் ஒரு பகுதியின் மீது இடிந்து விழுந்ததால் சுமார் 50 பேர் இறந்திருந்தார்கள். இது இந்தோனேசியாவிலிருக்கும் சீற்றமடையக்கூடிய சுமார் 130 எரிமலைகளில் ஒன்றாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்