ஞாயிறன்று நடந்த கத்தார்2022 மோதல்களில் வெற்றிபெற்ற பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் கால் இறுதிப்போட்டியில் சந்திக்கவிருக்கின்றன.
கத்தாரில் நடந்த 16 தேசிய அணிகளுக்கிடையிலான மோதல்களில் ஞாயிறன்று முதலில் பிரான்ஸ் – போலந்து அணிகள் மோதின. தற்போதைய உலகக்கிண்ண வீரர்களான பிரான்ஸ் அணியினரின் திறமைக்கு ஈடுகொடுத்து விளையாட்டை ஆரம்பித்தனர் போலந்து அணியினர். படுவேகமாகப் பந்தைத் தங்களுக்குள் பரிமாறி மோதலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பிரான்ஸ் அணியினரின் கைவரிசை முதல் பகுதியில் போலந்திடம் வெற்றிபெறவில்லை.
போலந்து அணியினரே அடுத்தடுத்து பிரான்ஸ் பிராந்தியத்துக்குள் நுழைந்து வலைக்குள் பந்தைப் போட்டுவிடும் சந்தர்ப்பங்களை உண்டாக்கிக்கொண்டிருந்தனர். 21 வது நிமிடத்தில் போலந்தின் நட்சத்திரம் ரொபெர்ட் லெவெண்டோவ்ஸ்கி ஒரு சந்தர்ப்பத்திலும், அதன் பின்னர் செலென்ஸ்கி இரண்டு சந்தர்ப்பங்களிலும் கோல் போட்டிருக்கக்கூடிய சாத்தியத்தை பெற்றார்கள். ஆனால், அதிர்ஷ்டம் அவர்கள் பக்கமில்லை.
பிரான்ஸ் அணியின் ஒலிவர் கிரூட் 52 வது நிமிடத்தில் தனது அணிக்காக 52 வது கோல் போட்டு வெற்றிப்பாதையைத் திறந்துவைத்தார். அவரைத் தொடர்ந்து ஷீலியன் ம்பாப்பே 74 வது நிமிடத்திலும், 90 வது நிமிடத்திலும் போலந்தின் வலைக்குள் பந்தை உதைத்துத் தள்ளி 3 – 0 என்ற இலக்கத்தை உயர்த்தினார். அதையடுத்த நிமிடங்களில் போலந்தின் ஆதங்கத்தைத் தீர்க்கக் கிடைத்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி தனது அணிக்காக ஒரு கோல் போட்டார் லெவெண்டோவ்ஸ்கி. முடிவு 3 – 1 ஆனது.
இரண்டாவதாக நடந்த மோதலில் இங்கிலாந்து ஆபிரிக்கக் கண்டத்தின் உதைபந்தாட்டக் கிரீடத்துக்குச் சொந்தக்காரர்களான செனகல் அணியினருடன் மோதினர். நட்சத்திர அணிவகுப்புடன் களத்தில் இறங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பப் பகுதியில் கடும் சவால்களை விடுத்தார்கள் செனகல் வீரர்கள்.
திடீரென்று இங்கிலாந்துக்கு வெற்றிக்கான பாதையைச் செப்பனிட்டுக் கொடுத்தார் 19 வயதான ஜூட் பெல்லிங்காம். தனது திறமையான பந்து உருட்டலின் மூலம் எதிரணிக்குப் போக்குக்காட்டிவிட்டு அதை ஜோர்டன் ஹாண்டர்சனிடம் அனுப்பினார் அவர். 1 – 0 அழகாக செனகல் வலைக்காப்பாளரை ஏமாற்றிக்கொண்டு வலைக்குள் விழுந்தது. முதலாவது பாதிக்குள்ளேயே அணித்தலைவர் ஹரி கேன் அதை 2 – 0 ஆக்கினார்.
இரண்டாவது பாதியில் செனகல் அணியினரின் உற்சாகப்பந்தில் காற்று பெருமளவு இல்லாமல் போயிருந்தது. ஆரம்பத்தில் வேகமாக விளையாடி எதிரணியைத் திக்குமுக்காடச் செய்த அவர்கள் தமது பக்கத்துக்குள்ளேயே நின்ற பந்தைத் தவிர்ப்பதிலேயே கருத்தைச் செலுத்தவேண்டியதாயிற்று. இங்கிலாந்தின் பயாக்கோ சக்கா 3 – 0 என்று எண்ணிக்கையை 57 வது நிமிடத்தில் உயர்த்திய பின்னர் செனகல் அணியினரிடம் காற்றுப்போய்விட்டது.
10 திகதி சனிக்கிழமை பிரான்ஸ் – இங்கிலாந்து அணியினரின் காலிறுதி மோதல் நடைபெறும்.
சாள்ஸ் ஜெ. போமன்