கனடாவில் பிறந்த மொரொக்கோவின் வலைகாப்பாளர் தனது வேர்களை மறக்காதவர்.

கத்தார் 2022 இல் நடந்த 16 நாடுகளுக்கான மோதல்களில் சகலரின் கவனத்தையும் கவர்ந்தவர் வலைக்காப்பாளர் யசீன் போனோ [Yassine Bounou]. காலிறுதிப் போட்டிகளுக்காகச் சித்தியடையும் அந்த மோதல்களில் வட அமெரிக்க, ஆசிய நாடுகளின் அணிகள் எல்லாவற்றின் கனவுகளும் உடைக்கப்பட்ட நீர்க்குமிழிகளாகின. ஆபிரிக்க நாடுகளின் நம்பிக்கை நட்சத்திரமாகியிருக்கும் மொரொக்கோ மட்டுமே ஐரோப்பிய, தென்னமெரிக்க உதைபந்தாட்ட ஜாம்பவான்களுக்கு இணையாக அடுத்த கட்டப் போட்டிகளுக்குச் சித்தியெய்தியிருக்கிறது. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மொரொக்கோவின் வலைகாப்பாளரான யசீன் போனோ என்றால் மிகையாகாது. 

கனடாவின் மொன்ரியல் நகரில் பிறந்தவர் போனோ. கத்தாரில் அவரது அணியின் ஒவ்வொரு மோதல்களிலும் தனது திறமையைக் காட்டியிருந்தார். மொரொக்கோவுக்குக் குடிபெயர்ந்த அவர் இரட்டைக் குடியுரிமை உள்ளவர். எட்டு வயதிலேயே  கஸாபிளாங்கா உதைபந்தாட்ட அணியொன்றில் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார். தனது 19 வது வயதுவரை அங்கேயே விளையாடினார்.

அதன் பின்னர் ஐரோப்பாவின் வெவ்வேறு உதைபந்தாட்ட அணிகளில் விளையாடிய அவர் 2013 முதல் மொரொக்கோவின் தேசிய அணியின் வலைக்காப்பாளராக விளையாட ஆரம்பித்தார். அவரது திறமையைக் கண்டு கனடியத் தேசிய உதைபந்தாட்ட அணியினர் அவரைக் கனடாவுக்காக விளையாடக் கேட்டுக்கொண்டபோது தனது மறுப்பைத் தெரிவித்துவிட்டார். 

மொரொக்கோவில் வளர்ந்தபோது தான் உதைபந்தாட்ட நட்சத்திரமாக மொரொக்கோவின் தேசிய அணியில் விளையாடவேண்டும் என்று கனவு கண்டதாகவும் அதைத் தவிர வேறெந்த நாட்டுக்காகவும் விளையாடத் தான் விரும்பவில்லையென்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். கனடா அணியினருடன் கத்தாரில் மோதியபோது 2 – 1 என்று மொரொக்கோவே வெற்றிபெற்றது. கனடாவுக்குக்  கிடைத்த 1 கோல் மொரொக்கோ வீரர் ஒருவர் மூலமாகவே போனோவின் வலைக்குள் நழுவியிருந்தது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *