அதிக கோல்கள் அடித்தவர்கள் என்ற முதலிடத்தில் வலன்சியாவுடன் சேர்ந்துகொண்டார் ம்பாப்பே.

சனிக்கிழமையன்று நடந்த உலகக்கோப்பை மோதலில் பங்குபற்றின ஆஸ்ரேலியா – துனீசியா, போலந்து – சவூதி அரேபியா, பிரான்ஸ் – டென்மார்,க் ஆகியவை. கடைசி மோதலில் எல்லோரும் எதிர்பார்க்கும் ஆர்ஜென்ரீனா மோதுகிறது மெக்ஸிகோவுடன். ஆஸ்ரேலியா தன்னை எதிர்கொண்ட துனீசியாவுடன் 1 – 0 வெற்றியைப் பெற்றது.

போலந்து – சவூதி அரேபியா மோதல் வளைகுடா நாட்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. முதல் மோதலில் உதைபந்தாட்ட மைதானத்தின் அரக்கனான ஆர்ஜென்ரீனாவை மண்கவ்வ வைத்து அராபிய மக்களுக்குப் பெருமை பெற்றுக்கொடுத்த சவூதி அரேபிய அணி போலந்தை எதிர்கொண்டது. தனது முதலாவது மோதலில் மெக்ஸிகோ அணியை வெற்றிகொள்ள முடியாமல் 0 – 0 என்ற முடிவைப் பெற்ற போலந்தை வெல்லவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு விளையாடினார்கள் சவூதி அரேபிய வீரர்கள்.

மோதலின் ஆரம்பத்தில் சவூதி அரேபிய வீரர்களின் வேகமான விளையாட்டு போலந்து அணியைத் திகைக்க வைத்ததை வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருந்தது. கிட்டத்தட்ட பாதி விளையாட்டு நேரம் முடியும்போதுதான் போலந்து சுதாரித்துக்கொண்டு தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடத் தொடங்கியது. பியோட்டிர் ஸெலென்ஸ்கி போலந்தின் முதலாவது கோலைப் போட்டார். விரைவிலேயே சவூதி அரேபியாவுக்கெதிராக தவறான ஆட்டம் ஆடியதற்காக ஒரு பெனால்டி உதை போலந்துக்கு எதிராகப் போடும் சந்தர்ப்பம் கிடைத்தது. சவூதிக்காகப் பந்தை உதைத்த பெராஸ் அதில் வெற்றியடையவில்லை. 

விரைவில் போலந்தின் மட்டுமன்றி ஐரோப்பாவின் நட்சத்திரமான ரோபர்ட் லெவாண்டோவ்ஸ்கி தனது அனியின் இறுதி முடிவான 2 – 0 கோலைப் போட்டார். தனது முதலாவது மோதலில் ஒரு பெனால்டி போடக் கிடைத்தும் தவறவிட்ட அவர் தனது முதலாவது கோலைப் போட்டதும் உணர்ச்சிவசப்பட்டு சந்தோசக் கண்ணீர் விட்டதை ரசிகர்கள் காணக்கூடியதாக இருந்தது.

உலகக்கோப்பையைக் கடந்த முறை கைப்பற்றிய பிரான்ஸ் அணியினர் டென்மார்க்கைத் தமது இரண்டாவது மோதலில் எதிர்கொண்டனர். மோதலின் முதல் பாதி மெதுவாகவே கழிந்துகொண்டிருந்தது. சுமார் 60 நிமிடங்கள் கழிந்த பின்னரே பிரான்ஸ் தனது அதிவேகமான பந்து விளையாட்டைக் காட்டத் தொடங்கியது. டென்மார்க்கோ பெருமளவில் தடுமாறித் திணறிக்கொண்டிருந்தது.

பிரான்ஸ் வீரர் கிலியன் ம்பாப்பே தனது அணியின் முதலாவது மோதலில் 4 – 1 வெற்றியின் போதே ஒரு கோல் போட்டிருந்தார். டென்மார்க்குக்கு எதிராக விளையாடியபோதும் அவரது திறமை தனியாக மின்னியது. 61 வது நிமிடத்தில் அவர் முதலாவது தடவையாக எதிரணியின் வலைக்குள் பந்தை உதைத்து வெற்றிகண்டார். விரைவிலேயே சுதாரித்துக்கொண்ட டென்மார்க் சார்பாக 68 வது நிமிடத்தில் ஆந்திரியாஸ் கிரிஸ்டன்சன் பதிலடி கொடுத்து 1 – 1 ஆக்கினார். 86 வது நிமிடத்தில் மீண்டும் ம்பாப்பேயின் 2 – 1 கோல் பதிவானது.

ம்பாப்பே மொத்தமாக 3 கோல்கள் அடித்து 2022 இல் அதிக கோல்கள் போட்டவர் என்ற இடத்தை ஈகுவடோர் அணியின் என்னர் வலன்சியாவுடன் பகிர்ந்துகொள்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *