அன்னையர் தினத்தையொட்டி இராணுவ வீரர்கள் சிலரின் தாய்மாரைச் சந்தித்துப் பேசினார் ஜனாதிபதி புத்தின்.

நவம்பர் 27 ஞாயிறன்று ரஷ்யாவில் அன்னையர் தினம் கொண்டாடப்படும். அதையொட்டி வெள்ளிக்கிழமையன்று நாட்டின் இராணுவ வீரர்கள் சிலரின் தாய்மாரைச் சந்தித்து அளவளாவினார் ஜனாதிபதி புத்தின். போரில் பங்குபற்றியவர்கள், அல்லது போர்முனையில் இருப்பவர்களின் தாய்மார்களிடையே சிலரை மட்டும் தெரிந்தெடுத்து அவர் சந்தித்தார்.

மொஸ்கோவிலிருக்கும் தனது வீட்டில் தொலைக்காட்சிக் கமராக்களின் முன்னிலையில் அந்தச் சந்திப்பு நடந்தேறியது. அந்த நிகழ்ச்சியில் ஒரு நீளமான மேசையொன்றைச் சுற்றித் தாய்மார்கள் அமர்ந்திருக்க அவர்களுடன் ஒருவராகப் புத்தின்  சம்பாஷித்துக்கொண்டிருந்த காட்சி படங்களாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் வெளியாகியிருக்கின்றன.

அந்தத் தாய்மாரிடம், “உங்களுடைய மனவேதனையை நான் உணர்கிறேன். இணையத்தளங்கள், செய்திகள், சமூகவலைத்தளங்களில் பொய்ச் செய்திகளெல்லாம் வந்துகொண்டிருக்கின்றன. அவைகளையெல்லாம் நம்பாதீர்கள்,” என்று ரஷ்யாவின் உக்ரேன் மீதான தாக்குதல்களைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

பெப்ரவரியில் ரஷ்யப் படைகள், “பிரத்தியேக நடவடிக்கை,” என்ற பெயரில் உக்ரேனுக்குள் நுழைந்த பின்னர் இப்படியான ஒரு சந்திப்பில் புத்தின் ஈடுபடுவது இதுவே முதல் தடவையாகும். இந்த நிகழ்ச்சியானது ரஷ்யர்களிடையே போரைப் பற்றிப் பரவலாக ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை ரஷ்ய ஜனாதிபதி ஒரு பிரச்சினையாக உணர்கிறார் என்பதையே காட்டுகிறது என்கிறார்கள் அவதானிகள்.

அந்தச் சந்திப்புக்கு வரவேற்கப்பட்ட பெண்கள் அனைவரும் ஏதாவது ஒரு வழியில் ரஷ்ய அரச இயந்திரத்துடன் சம்பந்தப்பட்டவர்களே என்கிறார் “போர்வீரர்களின் அன்னையர்” அமைப்பைச் சேர்ந்த ஒல்கா சுக்கனோவா. போருக்கெதிராக நிகழ்ச்சிகள் நடத்தும் அவரோ அவரது அமைப்பைச் சேர்ந்தவர்களோ அங்கே வரவேற்கப்படவில்லை. 

உக்ரேனில் போரிட்டு இறந்த ரஷ்யப் போர்வீர்களின் எண்ணிக்கை சுமார் 6,000 என்று ரஷ்யாவின் உத்தியோகபூர்வமான செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சு இதுவரை அங்கே 100,000 ரஷ்யப் போர்வீரர்கள் காயப்பட்டிருக்கிறார்கள் அல்லது இறந்திருக்கிறார்கள் என்கிறது. உக்ரேன் தனது போர்வீரர்களின் இறப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *