ஐரோப்பியர்கள் 50,000 பேர் வெளியேறி ஐரோப்பியரல்லாதோர் 331,000 பேர் ஐக்கிய ராச்சியத்தினுள் நுழைந்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று 2016 இல் ஐக்கிய ராச்சியம் வாக்கெடுப்பு நடத்தியது. பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் அச்சமயத்தில் அதற்கான காரணமாக “அளவுக்கதிகமான வெளிநாட்டவர்கள் வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழிவகுக்கிறது,” என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆதரவாக வாக்களித்தோரில் பலரும் அதை நம்பியே ஆதரவாக வாக்களித்தனர் என்று பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பீடுகள் குறிப்பிட்டன. 

2021 – 2022 ஆண்டுக்கான புள்ளிவிபரங்களை ஐக்கிய ராச்சியம் வெளியிட்டிருக்கிறது. அவ்வருடத்தில் நாட்டினுள் வந்தவர்களின் நிகர எண்ணிக்கை 504,000 ஆகும். அதற்கு முந்தைய வருடத்தில் அது 173,000 ஆக இருந்து மூன்று மடங்குகளாக அதிகரித்திருக்கிறது. 

ஐக்கிய ராச்சியத்துக்குள் குடிபுக வருபவர்களைக் குறைக்கவேண்டும், அதற்கு பிரெக்ஸிட் நல்லது என்று தொடர்ந்தும் வாதாடுகிறார்கள். அனுமதியின்றி நாட்டினுள் நுழைவோரைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்பதில் திடமாக இருக்கும் நாட்டின் உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவர்மான் அவ்விடயத்தில் வெற்றிபெற அரசு தவறிவிட்டது என்று ஒப்புக்கொள்கிறார்.

குடிவரவு சமீபத்தில் அதிகரிக்கக் காரணம் உலகில் ஏற்பட்டிருக்கும் நிலையற்ற தன்மையே என்கிறார்கள் அரசியல்வாதிகள். புள்ளிவிபரங்களின்படி 89,000 பேர் உக்ரேனிலிருந்தும் 76,000 ஹொங்கொங்கிலிருந்தும் ஐக்கிய ராச்சியத்தினுள் குடியேறியிருக்கிறார்கள். 21,000 பேர் ஆப்கானிஸ்தான் அகதிகளாகும். 35,000 பேர் நாட்டுக்குள் அனுமதியின்றி உள்புகுந்திருப்பவர்களாகும். அவர்கள் புள்ளிவிபரங்களில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *