ஜப்பானும், தென் கொரிய அணியும் தோற்கடிக்கப்பட்டதுடன் ஆசியாவின் அணிகளெதுவும் கத்தார் 2022 இல் மிச்சமில்லை.
திங்களன்று கத்தாரில் நடந்த இரண்டு மோதல்கள் ஒவ்வொன்றிலும் ஆசிய அணியொன்று பங்குபற்றியது. ஜப்பானை எதிர்கொண்டது கிரவேசியா. அடுத்ததாக தென்கொரியாவை நேரிட்டது பிரேசில் அணி. கிரவேசியாவும், பிரேசிலும் வெற்றிபெற்று காலிறுதிக் கட்ட மோதல்களுக்குப் போகின்றன.
2018 இல் நடந்த உலகக்கோப்பை மோதல்களில் நுண்ணிய திறமையைக் காட்டி எல்லோரையும் கவர்ந்து, இரண்டாவது இடத்தைக் கைப்பற்றிய அணி கிரவேசியாவினுடையதாகும். கத்தாரில் அவர்கள் இதுவரை விளையாடியபோது ரசிகர்களுக்கு அதே சுவாரஸ்யத்தை அவர்கள் கொடுக்கவில்லை. ஜப்பானுடன் மோதியபோதும் ஜப்பான் அணியே பலமானதாகத் தெரிந்தது. முதலாவதாக 43 வது நிமிடத்தில் அவர்களே ஒரு கோல் போட்டனர். இடையிடையே மட்டுமே கிரவேசிய அணியினர் திருப்பித் தாக்கினர். பத்து நிமிடங்களின் பின்னர் 1 – 1 என்று நிலைமையை மாறியது.
எந்த அணியும் வெற்றியடையாததால் வலை காப்பவர்களின் கையில் வெற்றி எவருடையது என்பதைத் தீர்மானிக்கும் முடிவு விழுந்தது. தனித்தனியாக இரண்டு அணியின் வீரர்களும் வலைக்குள் பந்தை உதைக்கும்போது ஜப்பான் வீரர்கள் மூவர் அதில் தோல்வி கண்டனர். கிரவேசியாவின் வலைகாப்பவரான டொமினிக் கிவாகோவிச் கதாநாயகனாக மாறி, தனது அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
மற்ற மோதலில் தென் கொரியாவை எதிர்கொண்ட பிரேசில் அணியினர் முதல் பாதிக்குள்ளேயே நடனமாடியபடி 4 தடவைகள் கோல் போட்டனர். அதன் பின்னர் தென் கொரியா தன் பங்குக்கு 1 கோல் போட்டது. மோதல் முழுவதிலும் பிரேசில் அணியினர் ரசிகர்களுக்கு அதை ஒரு நடனமாகவே ஆடிக் காட்டினார்கள். ஆரம்பத்திலேயே தோற்றுவிட்டாலும், மனமுடைந்து கைவிடாமல் தமது வழக்கமான விளையாட்டைத் தொடர்ந்த தென் கொரிய அணியினர் நிச்சயமாகப் பாராட்டுக்குரியவர்களே.
சாள்ஸ் ஜெ போமன்.