திருமண பந்தமின்றி உடலுறவு சட்ட விரோதம் என்பது இந்தோனேசியாவில் புதிய சட்டம்.

திருமணம் செய்துகொள்ளாமல் உடலுறவு வைத்துக்கொள்ளலாகாது, சேர்ந்து வாழலாகாது போன்ற சட்டத்திருத்தங்கள் இந்தோனேசியப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. நாட்டின் குடிமக்கள் மட்டுமன்றி நாட்டுக்கு விஜயம் செய்கிறவர்களும் அதைக் கடைப்பிடிக்கவேண்டும். மீறுகிறவர்கள் ஒரு வருடம் வரைச் சிறைத்தண்டனைக்கு உள்ளாவார்கள். குறிப்பிட்ட திருத்தங்கள் மூன்று வருடங்களின் பின்னர் அமுலுக்கு வரும்.

மேற்கண்ட மனித உறவுகள் பற்றிய சட்டங்கள் தவிர நாட்டின் தேசிய கோட்பாடான பங்கசிலாவையோ, ஜனாதிபதியையோ விமர்சித்து அவதூறு பரப்புவதும் சட்டவிரோதமாக்கப்பட்டிருக்கிறது. கருக்கலைப்பும் சட்டவிரோதமானதாகும். ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பின் மட்டும் அது கருவளர்ச்சியின் 12  வாரங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்படும்.

மேற்கண்ட சட்டத்திருத்தங்கள் இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது. நாட்டின் இஸ்லாமியப் பழமைவாதிகளின் கை மென்மேலும் ஓங்கிவருவதே இந்த மாற்றங்களுக்குக் காரணம் என்று ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல்கொடுப்போர் சுட்டிக் காட்டுகிறார்கள். அப்படியான இயக்கங்கள் இப்படியான சட்டங்களுக்குக் எதிராகக் குரல் கொடுத்து, ஊர்வலங்கள் நடத்தியதால் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவற்றைவிடக் கடுமையான சட்டத் திருத்தங்கள் பிரேரிக்கப்பட்டுக் கைவிடப்பட்டன.

உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாட்டின் சமூகம் இப்படியான வழியில் செல்வது கவலைக்குரியது என்று நாட்டின் மனிதாபிமான அமைப்புகள், சட்டவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மக்களின் ஒழுக்க வழக்கங்களைக் கண்காணித்துத் தண்டிப்பது அரசாங்கத்தின் வேலையல்ல என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஓரினச்சேர்க்கை விரும்பிகள் சமூகத்தில் ஒதுங்கி, ஒடுங்கி வாழவேண்டிய நிலையையும் இப்படியான சட்டங்கள் உண்டாக்கும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *