ஆர்ஜென்ரீனா உலகக் கோப்பையை வென்றால் கோழிக்கோட்டில் பிரியாணி இலவசம் என்கிறார் மெஸ்ஸி விசிறி சகாத்.
கேரளாவிலிருக்கும் கோழிக்கோடு நகரின் ஒரு பாகமான வெள்ளையிலில் CP Haji’s Hotel என்ற உணவுக்கடையை நடத்துகிறார் லயனல் மெஸ்ஸியின் விசிறியான சகாத். இவர் மெஸ்ஸியின் விசிறி மட்டுமன்றி ஆர்ஜென்ரீனா தேசியக் குழுவை ஆராதிப்பவர். கத்தாரில் நடக்கும் உலக் கிண்ணத்துக்கான போட்டிகளை வென்றெடுக்கப் போகிறவர்கள் அவர்களே என்கிறார். அவர்கள் கிண்ணத்தை வெல்லும்போது தனது கடையில் இலவசமாக பிரியாணி கொடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்தியாவில் உதைபந்தாட்ட விளையாட்டில் மிகவும் ஆர்வமுள்ளவர்களைக் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது கேரளா என்றால் அது மிகையாகாது. இந்தியாவின் மற்றைய மாநிலங்களெல்லாம் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது அவற்றில் ஒன்றிப்போகும்போது கேரளாவைச் சேர்ந்தவர்களோ உதைபந்தாட்டத்தில் ஒட்டிப்போகிறார்கள். ஒவ்வொரு தடவையும் சர்வதேச உதைபந்தாட்டப் பந்தயங்கள் நடக்கும்போது கேரளாவின் பட்டி தொட்டிகளிலெல்லாம் அதன் எதிரொலியைக் காணலாம். வீரர்களின் கட் – அவுட்டுகள், இசை நிகழ்ச்சிகள், நட்சத்திர நிகச்சிகள், நடன நிகழ்ச்சிகள் என்று களை கட்டுவது வழக்கம்.
கத்தார் உலகக் கோப்பையை ஒட்டி பிரபல நடிகர் மோகன்லால், இயக்குனர் டி.கே.ராஜிவ் குமார், பாடகர் ஹிஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் கூட்டுறவில் வீடியோப் படமொன்று வெளியாகியிருக்கிறது. கேரளாவின் மலப்புறம் பிராந்தியத்தில் உதைபந்தாட்டம் எத்தனை முக்கியமானது என்பதையும், கேரளாவுக்கும் அந்த விளையாட்டுக்கும் இடையேயிருக்கும் உறவையும் அப்படம் காட்டுகிறது.
சகாத்தின் கடை கத்தாரில் நடக்கப்போகும் உதைபந்தாட்டப் போட்டிகளை எதிர்நோக்கிச் சில மாதங்களுக்கு முன்னரே கோலாகலமாகிவிட்டது. கடை வாசலில் லயனல் மெஸ்ஸியின் 10 அடி உயரமான படத்தட்டு எல்லோரையும் வரவேற்கிறது. உள்ளே ஆர்ஜென்ரீனாவின் நிறங்களான நீலமும் வெள்ளையும் பூசப்பட்டிருக்கிறது. அந்த நாட்டின் தேசியக் குழுவினரின் படங்கள் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கிறது. முக்கியமாக மெஸ்ஸி வியாபித்திருக்கிறார். அதைத் தவிர மோதலில் ஈடுபடவிருக்கும் நாடுகளின் தேசியக் குழுக்கள் படங்களும் அங்கே ஒட்டப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் சேர்ந்து அந்தப் பகுதியில் போகிறவர்களையெல்லாம் ஈர்த்து வருகின்றன. கடைக்கு வந்து அந்த உதைபந்தாட்டக் கோப்பைக் கண்காண்சியைக் கண்டு மகிழ்வதுடன் அவற்றுடன் நின்று படங்களையும் எடுத்து மகிழ்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்