உளநோய் உபாதைகள் உள்ளவர்கள் தமது வாழ்க்கையை முடித்துக்கொள்ள மருத்துவ உதவிசெய்ய கனடா தயாராகிறது.
யூதனேசியா [கருணைக்கொலை] என்றழைக்கப்படும் “இறப்பதற்கான உதவி” செய்வதை 2016 இல் சட்டபூர்வமாக்கியது கனடா. உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மிச்சமிருக்கும் வாழ்நாள் முழுவதும் மருந்துகளுடனும், உடல் வேதனைகளுடனும் வாழுவதைப் பாரமாக எண்ணுபவர்கள், விரும்பினால் தமது உயிரை மாய்த்துக்கொள்ள மருத்துவ உதவி செய்வது அதன் மூலம் சட்டபூர்வமாக்கப்பட்டது.
மேற்கண்ட சட்டமானது உள வியாதிகளைச் சேர்த்துக்கொள்ளவில்லை. அதை மாற்றி ஒருவர் தானே விரும்பி உயிரை மாய்த்துக்கொள்வதற்கான மருத்துவ உதவி செய்வதில் உலகின் தாராளமான சட்டங்களைக் கொண்டுவரும் நாடுகளில் ஒன்றாக மாறவிருக்கிறது கனடா. புதிய சட்டமாற்றம் மார்ச் 2023 முதல் கனடாவில் அமுலுக்கு வருகிறது.
அதையடுத்து உளவியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டதற்காக மட்டுமே மரணத்தை எதிர்கொள்ளுபவர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் உலகின் ஆறு நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். அப்படியான கருணைக்கொலை உதவியை நாடுபவர் அதற்கான விண்ணப்பத்தை அனுப்பவேண்டும். இரண்டு மருத்துவர்கள் அதைப் பரிசீலித்து குறிப்பிட்ட நபர் தனது உளவியல் பிரச்சினையால் பெரும் உபாதைகளை அனுபவிக்கிறாரா என்று முடிவுசெய்வார்கள்.
கனடாவில் கருணைக்கொலை அனுமதிக்கப்பட்ட 2016 முதல் இதுவரை சுமார் 30,000 பேர் அவ்வுதவியைப் பாவித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் 10,000 பேருக்கு அவ்வுதவி அனுமதிக்கப்பட்டது. அதே வருடத்தில் இறந்தவர்களில் சுமார் 3,3 விகிதத்தினர் இறப்பதற்கான மரண உதவி பெற்றவர்களாகும்.
கருணைக்கொலைகளுக்கான உதவியை அரசு செய்வதை எதிர்ப்பவர்களும் உண்டு. முதலில் ஒழுங்கான மருத்துவ உதவியைச் செய்யாமல் சிலருக்கு மரணத்துக்கான வசதி கொடுக்கப்பட்டதாக விபரங்கள் வெளியாகியிருக்கின்றன. மனித அவயங்களில் ஏதாவதொன்று ஒழுங்காகச் செயற்படாவிட்டாலும் ஒருவர் கருணைக்கொலையை நாடலாம் என்பதும் ஒரு சாராரால் எதிர்க்கப்படுகிறது. அவ்வுதவியானது அப்படியான நோயாளிகளுக்குத் தேவையான உதவியைச் செய்யாமல் தவிர்ப்பதற்காகப் பாவிக்கப்படுகிறது என்கிறார்கள் அவர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்