ஒற்றைப்பாவிப்பு பிளாஸ்டிக் கரண்டி கோப்பைகளைப் பாவனையிலிருந்து நிறுத்தப் போகிறது இங்கிலாந்து.
சூழலைப் பாதிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளைக் குறைக்கும் முயற்சிகள் ஐக்கிய ராச்சியத்தின் வெவ்வேறு பாகங்களில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகின்றன. 2020 இல் பிளாஸ்டிக்காலான உறிஞ்சிகள், கலக்கிகள் போன்றவைகளை இங்கிலாந்து பாவனையிலிருந்து நீக்கியது. விரைவில் உணவுச்சேவையில் பாவிக்கப்படும் கோப்பை, தட்டு போன்ற பிளாஸ்டிக்காலான ஏதனங்களையும் பாவனையிலிருந்து நீக்கவிருக்கும் திட்டங்களை சுற்றுப்புற சூழல் அமைச்சர் அறிமுகப்படுத்தவிருக்கிறார்.
ஐக்கிய ராச்சியத்தின் ஒரு பகுதியான ஸ்கொட்லாந்து ஜுன் 2022 லேயே அப்படியான பாவனைப்பொருட்களைத் தடைசெய்தது. வேல்ஸ் பிராந்தியத்தில் அந்தத் தடை இவ்வருட ஆரம்பத்தில் கொண்டுவரப்பட்டது.
இங்கிலாந்தில் மேற்கண்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான தயார்படுத்தல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தும் நாட்டின் அரசியலில் ஏற்பட்ட பிரதமர் தெரிவு, அரசு மாற்றம் போன்ற குழப்பங்களால் நிறைவேற்றலுக்குத் தாமதமாகிவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்