இளவரசன் ஹரி – மேகன் வாழ்க்கை தொடரை, த க்ரௌன் தொடரை விட அதிகமானோர் பார்த்தார்கள்.
நெட்பிளிக்ஸ் இணையத்தள வெளியீடான “ஹரி – மேகன்” பெரும் வெற்றிபெற்று வருவதாக பொழுதுபோக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இரண்டாவது பாகம் அத்தொடரில் வெளியாகியிருக்கிறது. அவை வெளியிடப்பட்ட சமயத்தில் அதைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 2,4 மில்லியன் ஆகும். எலிசபெத் மஹாராணியின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட “த க்ரௌன்” வெளியாகியபோது பார்வையாளர்கள் 1,1 மில்லியன் ஆக இருந்தது.
தனது அரசபொறுப்புக்களைத் துறந்துவிட்டுக் கனடாவுக்குச் சென்று குடியேறியிருக்கும் ஹரி – மேகன் தம்பதிகள் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரிடையே நிலவும் மோசமான பல விடயங்களை முன்னரே வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களே தயாரித்து வெளியிட்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர் மேலும் அதிக விபரங்களைத் தோண்டி அரசகுடும்பத்தினரை நாறவைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்குத் தொடரின் மூலம் எதுவும் கிடைக்கவில்லை. “வாந்தியெடுக்கத் தயாராகிக்கொண்டு அதைப் பாருங்கள்,” என்கிறது ஒரு பிரிட்டிஷ் நாளிதழ்.
சாதாரண மனிதர்களை விட எவ்வளவோ உயர்ந்த நிலையிலிருக்கும் ஹரியும், மேகனும் தமது காதல் எங்கே ஆரம்பமானது என்று ஆரம்பித்து, அரசகுடும்ப வாழ்க்கையின் மோசமான பக்கங்களால் தாம் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். உலகிலேயே அதி மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களாக அவர்கள் தங்களைச் சித்தரித்துக்கொள்கிறார்கள். எல்லாமே வெறும் போலியானது, பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் சின்னச்சின்ன விடயங்களை ஊதிப் பெரிதாக்கியிருக்கிறார்கள் என்று பல விமர்சகர்கள் சாடி வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்