பிரான்ஸின் லியோன் நகரில் தீவிபத்து, ஐந்து குழந்தைகள் உட்பட 10 பேர் மரணமடைந்த அவலம்.

பிரான்ஸில் மா நகரங்களில் ஒன்றான லியோனில் ஏற்பட்ட தீவிபத்து சுமார் 10 பேரின் உயிர்களைக் குடித்திருக்கிறது. இறந்தவர்களில் ஐந்து பேர் 3 – 15 வயதுக்கிடையிலான குழந்தைகள் என்ற விபரம் நாட்டை அதிரவைத்திருக்கிறது. ஆரம்பித்த தீயானது படு வேகமாகக் கட்டடமெங்கும் பரவியதாகவும் அதனால் பயந்துபோய்ப் பலர் சாளரங்களினூடாக வெளியே குதித்ததாகவும் விபத்து நடந்த இடத்துக்கு அருகிலுள்ளோர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்கள்.

“மிகவும் வேதனையான நிகழ்ச்சி இது. தீவிபத்தின் காரணம் எதுவென்பது இன்னும் தெரியவில்லை. அதை அறிந்துகொள்ள விசாரணைகள் நடந்து வருகின்றன,” என்று நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனின் [Gérald Darmanin] குறிப்பிட்டிருகிறார். நாட்டின் வீட்டுவசதித்துறை அமைச்சர், தான் காலையில் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று நேரடியாகப் பார்வையிடவிருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதுடன் உதவிகளைக் கண்காணிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

லியோன் நகரின் ஏழு மாடிக் கட்டடமொன்றில் வெள்ளியன்று அதிகாலையில் தீவிபத்து ஆரம்பித்தது. தீயணைப்புப் படையைச் சேர்ந்த 170 பேர்  தீயின் உக்கிரத்தை எதிர்கொண்டு அதை அணைக்கப் போராடினார்கள். கட்டடத்தின் கீழ்ப் பகுதியிலிருந்து மேல் நோக்கி வேகமாகப் பரவிய தீயில் படையினர் இருவரும் காயமடைந்திருக்கிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *