பாலஸ்தீன அரசை விமர்சித்ததற்காகக் கொல்லப்பட்ட நிஸார் பானத் உறவினர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு.
பாலஸ்தீனரான நிஸார் பானத் நீண்ட காலமாகவே பாலஸ்தீன அதிகாரத்தின் முக்கிய ஒரு விமர்சகராக இருந்து வந்தார். அதிகாலையொன்றில் பாலஸ்தீன அதிகாரத்தின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 20 பேர் நிஸார் பானத்தின் வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கடுமையாகத் தாக்கியபின் கைது செய்தார்கள் என்று அவரது குடும்பத்தினர் குறிப்பிடுகிறார்கள். காவலில் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு ஜூன் 2021 இல் அவர் இறந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. பாலஸ்தீனப் பகுதிகளில் பெரும் ஆர்பாட்டங்களால் அரசு அதற்காக விமர்சிக்கப்பட்டது. அது ஒரு திட்டமிட்ட கொலை என்று குறிப்பிடும் பானத் குடும்பத்தினர் அதைச் சர்வதேச நீதிமன்றத்திடன் முறையீடு செய்திருக்கிறார்கள்.
பானத்தின் இறந்த உடலை ஆராய்ந்த பிரேத பரிசோதகர்கள் அவரது தலையில் ஏற்பட்ட கடுமையான தாக்குதல்களாலேயே அவர் இறந்திருக்கிறார் என்று தெரிவிக்கிறது. அவர் கைது செய்யப்படுவது இது முதல் தடவையல்ல. எட்டுத் தடவைகளுக்கும் அதிகமாகக் கைதுசெய்யப்பட்ட அவர் வெவ்வேறு அளவு காலம் காவலில் கழித்திருக்கிறார் என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
“நாட்டின் நீதிமன்றத்தைவிடத் தம்மிடம் அதிகாரங்கள் அதிகமிருப்பதாக விசாரணை நடத்தும் பொலீஸ் அதிகாரம் நம்பிச் செயற்பட்டு வருகிறது. அப்படியான அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் அரசை விமர்சனம் செய்துவந்த ஒருவருக்காக நாம் நீதி கோருகிறோம்,” என்று பானத்தின் குடும்ப வழக்கறிஞர் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்திருக்கிறார்.
பாலஸ்தீன அதிகாரிகள் ஏழு பேர் மீது குறிப்பிட்ட வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மக்களின் பெரும் எதிர்ப்பைச் சமாளிக்க பாலஸ்தீன அதிகாரம் விசாரணை நடத்தி 14 பொலீஸ் உத்தியோகத்தர்களைக் கைது செய்தது. அவர்கள் சில காலத்தின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்ற விசாரணை நடத்தப்படுவதாகச் சொல்லி அது இழுபடுவதை அடுத்தே பானத்தின் குடும்பத்தினர் சர்வதேச நீதிமன்றத்தில் நீதியை நாடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்