உருகுவேயில் நடந்த முதலாவது சர்வதேச உதைபந்தாட்டக் கோப்பையில் நான்கே ஐரோப்பிய நாடுகள்.
நவம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டத்தின் உலகக் கோப்பைக்கான மோதல்கள் FIFA அமைப்பினால் நடத்தப்படும் 22 வது போட்டிகளாகும். 1904 இல் FIFA அமைப்பு சர்வதேச ரீதியில் உதைபந்தாட்டத்தில் எந்த நாட்டின் தேசிய அணி சிறந்தது என்று காட்டும் போட்டியை நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால், 1930 ஆண்டுவரை அப்படியான போட்டிகளில் பங்குகொள்வதில் உலக நாடுகளெதுவும் ஆர்வம் காட்டிக்கொள்ளவில்லை.
1930 ம் ஆண்டு தென்னமெரிக்காவின் உருகுவேயில் முதலாவது தடவையாக உலகக் கோப்பைக்கான பந்தயங்கள் ஒழுங்குசெய்யப்பட்டது. அந்த மோதல்களில் உலக நாடுகள் எதுவும் பங்குகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது வெவ்வேறு பிராந்தியங்களில் நடக்கும் மோதல்கள் பங்குபற்றிக் கடைசியாக உலகக்கோப்பைப் பந்தயத்துக்குச் சித்தியடையத் தேவையில்லை. ஆயினும் உலக நாடுகளிடையே அதற்கான ஆர்வத்தைத் தூண்டுவது இயலாமல் போனது.
மொத்தமாக 13 நாடுகள் மட்டுமே அந்த மோதல்களில் பங்குபற்ற முடிவுசெய்தன. அவற்றில் 4 நாடுகள் மட்டுமே ஐரோப்பாவைச் சேர்ந்தவை. அமெரிக்காவிலிருந்து 7 நாடுகள் பங்குபற்றின. சர்வதேச அளவில் நிலவிவந்த பொருளாதார வீழ்ச்சி நிலை, விளையாட்டு வீரர்களின் நிலை, சர்வதேச போட்டியொன்றில் ஆர்வமின்மை, நீண்ட கடல்வழிப் பயணம் போன்றவை 13 நாடுகள் மட்டுமே ஈர்க்கப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம்.
ருமேனியா, பிரான்ஸ், யூகோஸ்லாவியா, பெல்ஜியம் ஆகிய நான்று ஐரோப்பிய நாடுகளிலிருந்து வீரர்கள் கப்பல் வழியாக பயணமாயினர். ருமானியாவிலிருந்து அக்கப்பல் புறப்பட்டு மற்றைய ஐரோப்பிய நாடுகளின் வீரர்களை வழியில் ஏற்றிக்கொண்டது. தற்போது போன்று விளையாட்டு வீரர்களின் பின்னணியில் பெருமளவு பணமெதுவும் இருக்கவில்லை. சாதாரண தொழிலாளர்களாக இருந்த அவர்களுடைய முதலாளிகளிடம் அதற்கான நாட்டின் தேசிய அணி நிர்வாகிகள் பிரத்தியேக அனுமதி பெறவேண்டியிருந்தது.
ஆர்ஜென்ரீனாவும், உருகுவேயும் கடைசி மோதல் வரை சென்றன. அங்கே 4 – 2 என்ற இலக்கத்தில் வலைக்குள் பந்துகளைப் போட்ட உருகுவே முதல் முதலாக உலகக்கோப்பையைக் கைப்பற்றிய நாடு ஆகியது.
சாள்ஸ் ஜெ. போமன்