மிருகக்காட்சிசாலை ஒன்றிலிருந்து தப்பியோடிவிட்ட மனிதக் குரங்குகளால் சுவீடனில் பதட்டமும் துக்கமும்.
சுவீடன் மத்திய பிராந்தியத்திலிருக்கும் யாவ்ளே நகரையடுத்திருக்கும் திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் இருந்து டிசம்பர் 14 ம் திகதி ஐந்து மனிதக்குரங்குகள் தப்பியோடியிருக்கின்றன. அந்த மிருகங்களுக்காக வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு வெளியே அவை தப்பியோடிவிட்டன. அவற்றில் மூன்றை மிருகக்காட்சி சாலை வேட்டைக்குழுவினர் முதல் நாளே சுட்டுக் கொன்றுவிட்டனர்.
குறிப்பிட்ட மனிதக் குரங்குகள் இருக்கும் மிருகக்காட்சிசாலையானது திறந்தவெளி என்று குறிப்பிடப்பட்டாலும் ஆபத்தான மிருகங்கள் நடமாட எல்லைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அவை மக்களை நெருங்காமல் பாதுகாக்கப்படுவதுடன், அந்தக் காட்சிசாலை மூடப்பட்ட நேரங்களில் கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன.
அவற்றில் மூன்று முதலில் கூண்டுகளிலிருந்து மட்டுமன்றி, தமக்கான வகுக்கப்பட்ட எல்லைகளிலிருந்தும் வெளியே தப்பியோடியது தெரியவந்தது. அதையறிந்து மிருகக்காட்சியினர் சுற்றுவட்டாரத்திலிருக்கும் மக்களை எச்சரித்து வந்த சமயத்தில் திடீரென்று மீதமிருந்த மனிதக்குரங்குகளும் அங்கிருந்து வெளியேறிவிட்டமை தெரியவந்தது. அதையடுத்து வேட்டையாளர் குழுவொன்றின் மூலம் அவைகளைத் தேடிய மிருகக்காட்சிசாலை நிர்வாகம் நான்கு மனிதக்குரங்குகளை அப்பகுதியில் கண்டுபிடித்து அவைகள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்ததில் அவற்றில் மூன்று இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மக்களின் காட்சிப்பொருளாக இருக்கும் அந்த மனிதக்குரங்குகளை நிர்வாகத்தினர் கைப்பற்றாமல் சுட்டுக் கொல்வது பற்றிப் பலர் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். கூண்டுகளிலிருந்தும், தமது எல்லைகளிலிருந்தும் வெளியேறிய அந்தக் காட்டு மிருகங்கள் புதிய சூழலை எதிர்கொள்ள முடியாதவை என்று மிருகங்களின் வாழ்வு பற்றிய ஆராய்ச்சி செய்பவர் குறிப்பிடுகிறார்கள்.அந்த நிலைமையில் அவைகளை நெருங்குவது எவருக்கும் ஆபத்தானதே என்பதால் சுட்டுக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
சுடப்பட்ட நாலாவது மிருகம் என்ன ஆனது என்பது பற்றி இதுவரை தெரியவில்லை. ஐந்தாவது மனிதக் குரங்கின் இருப்பிடமும் தொடர்ந்தும் தெரியாத நிலையில் மிருககாட்சிசாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மிருகக்காட்சிசாலையின் உதவியாளர்கள் அவ்வப்போது அந்த மிருகங்களுக்குப் பயிற்றப்பட்ட ஒலிகளைச் சுற்று வட்டாரத்தில் ஒலிக்க விடுவதன் மூலம் அவற்றின் இடத்தைக் கண்டறியவும், கூண்டுகளை நோக்கி ஈர்க்கவும் முயன்று வருகிறார்கள். அம்முயற்சியில் இதுவரை அவர்கள் வெற்றியடையவில்லை. ஆனால், இரண்டு மனிதக்குரங்களை அவைகள் வாழும் எல்லைக்குள் உணவுகளை வைத்ததன் மூலம் வரவழைத்திருக்கிறார்கள். தொடர்ந்தும் மனிதர்கள் எவரும் அப்பகுதிக்குச் செல்வது தவிர்க்கப்படுகிறது.
மனிதக்குரங்குகள் எப்படித் தப்பியோடின என்பது தொடர்ந்தும் மிருகக்காட்சிசாலை நிர்வாகத்தினருக்குக் கேள்விக்குறியாகவே இருந்துகொண்டிருக்கின்றது. அவைகள் வாழும் எல்லைகளில் ஓட்டைகள் இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகப்படுகிறார்கள். அவைகள் எல்லாவற்றையும் சுட்டுக் கொல்லும்வரை அப்பகுதிக்கு எவரும் சென்று பார்வையிடுவதும் தவிர்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ.போமன்