“எங்கள் நாட்டு விடயங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள்,” உயர்கல்விக்கான தலிபான்களின் அமைச்சர்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதும் நாட்டில் பெண்களுக்குச் சம உரிமை கொடுக்கப்படும் என்றெல்லாம் உறுதிகூடிய தலிபான்கள் ஆட்சி மீண்டும் அவர்களுடைய 1996 – 2001 கால ஆட்சியின் நகலாக மாறிக்கொண்டிருக்கிறது. படிப்படியாக நாட்டின் பெண்களின் நடமாட்டங்களைத் தடைப்படுத்தி வந்திருக்கிறார்கள் தலிபான்கள். அவர்கள் இவ்வார ஆரம்பத்தில் அறிவித்திருந்த புதிய கட்டுபாடு பெண்களுக்கு உயர்கல்விக்கூடங்களில் கற்க அனுமதியில்லை என்பதாகும்.
ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்னர் சிறுமிகளுக்கு 7 – 9 வகுப்புகளில் கற்பதற்கு உரிமையில்லாமல் செய்திருந்தார்கள் தலிபான்கள். அதையடுத்து அவ்வப்போது, ஆங்காங்கே பெண்களும், சிறுமிகளும் எதிர்ப்பு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர். ஆரம்பத்தில் அதை அனுமதித்து வந்த தலிபான்கள் நாளடைவில் தமக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்தில் ஈடுபடுகிறவர்கள் மீது காவல்படையை ஏவிவிட்டு வருகிறார்கள்.
செவ்வாயன்று பெண்களுக்குப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் கல்விக்குத் தடை என்று அறிவித்ததும் அதைப் பல இஸ்லாமிய நாடுகளே எதிர்த்தன. கத்தார், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் அவற்றில் சிலவாகும். துருக்கிய வெளிவிவகார அமைச்சர் அதை, “இஸ்லாத்துக்கு எதிரானது, மனிதாபிமானமற்றது,” என்று சாடினார்.
சர்வதேச எதிர்ப்பை எதிர்கொண்ட உயர்கல்விக்கான அமைச்சராக இருக்கும் நீடா முஹம்மது நடீம், “பல்கலைக்கழகங்களின் ஆண்களும், பெண்களும் நெருங்கி உறவாடுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை அவசியமானது, அத்துடன் பல்கலைக்கழகப் பாடங்கள் சில இஸ்லாத்துக்கு விரோதமானவை. எங்கள் உள் நாட்டு விடயங்களில் வெளிநாட்டினர் தலையிடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்,” என்று பதிலளித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்