அமெரிக்க அரசின் கொள்வனவாளர் சட்டங்களை மீறியதற்காக மெத்தா 725 மில்லியன் டொலர்கள் தண்டம் கட்டவிருக்கிறது.
தனது பாவனையாளர்கள் விபரங்களை மூன்றாம் நபருக்குப் பாவனைக்காகக் கொடுத்த குற்றத்துக்காக பேஸ்புக் நிறுவனம் தண்டம் கொடுக்கவிருக்கிறது. அமெரிக்காவின் கொள்வனவாளர்கள் விபரங்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றத்துக்காக நீதிமன்றத்தில் வழக்காடுவதைத் தவிர்ப்பதற்காக 725 மில்லியன் டொலர்களைக் கொடுக்க மெத்தா நிறுவனம் ஒத்துக்கொண்டிருக்கிறது.
2018 இல் பிரிட்டிஷ் அரசியல் ஆதரவு ஆராய்வு நிறுவனமான Cambridge Analytica க்கு பேஸ்புக் நிறுவனம் தனது 87 மில்லியன் பாவனையாளர்கள் பேஸ்புக்கில் என்னென்ன செய்கிறார்கள் போன்ற விபரங்களை விற்றிருந்தது. பாவனையாளர்களுக்கு அதுபற்றி எதையும் அறிவிக்கவில்லை. Cambridge Analytica 2016 அமெரிக்கத் தேர்தலில் வாக்களிப்பவர்களைப் பற்றிய விபரங்களை அறிந்துகொள்வதற்காக அவ்விபரங்களைப் பாவித்தது.
Cambridge Analytica நிறுவனத்தை 2016 தேர்தலில் வாக்காளர்களின் விருப்பு, வெறுப்புக்களை அறிந்து தரும்படி கேட்கப்பட்டது. அதற்காக அந்த நிறுவனம் மேற்குறிப்பிட்ட விபரங்களை வைத்து ஆராய்ந்து உதவி அந்தத் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெறுவதற்குப் பெரும் உதவி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
பேஸ்புக் தற்போது நஷ்ட ஈடாகக் கொடுக்கவிருக்கும் தொகையானது இதுவரை குறிப்பிட்ட சட்ட மீறல்களுக்காக எந்த ஒரு நிறுவனமும் கொடுக்காத பெரிய தொகை ஆகும். மட்டுமன்றி பேஸ்புக் நிறுவனமும் இதுவரை தனது தவறு ஒன்றுக்காக இத்தனை பெரிய தொகையைத் தண்டமாக எவருக்கும் கொடுத்ததில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்