இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 1
2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி என்றழைக்கப்பட்ட ஆழிப் பேரலைகள் இலங்கை உட்பட இந்து சமுத்திரத்தில் உள்ள பதினான்கு நாடுகளில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தின. புள்ளி விபரங்களின்படி இந்தோனேசியாவிற்கு அடுத்ததாக இலங்கையே அதிக அளவிலான அழிவுக்கு முகம் கொடுத்திருந்தது. இலங்கையை டிசம்பர் 26ம் திகதி காலையில் தாக்கிய இரண்டு பேரலைகளால் 35,322 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. (உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000 ஐத் தாண்டும் என்பது பலரின் ஊகமாக இருந்தது.) ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் தற்காலிகமாக இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. 150,000 பேர் தமது வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அவர்களுள் 75% ஆனவர்கள் கடற் தொழிலில் ஈடுபட்டவர்கள். அத்துடன் ஆயிரக்கணக்கான வீடுகள், வியாபார நிலையங்கள், என்பன முற்றாக அழிந்து போயின. சில நூற்றுக்கணக்கான உல்லாச விடுதிகள், உணவகங்கள் என்பன சேதமானதுடன் ஆயிரக்கணக்கான வாகனங்கள் உட்பட பெரும் சொத்திழப்பும் ஏற்பட்டது.
இதனைத் தவிர, கடல் நீர் புகுந்ததால் 259 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் உவராகி பயிர் வளர்ப்புக்குத் தகுதியற்றவையாக மாறின. விவசாய இயந்திரங்கள் நாசமாகின. மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள், படகுகள் என்பனவும் சேதமாகின. அத்துடன் பல இடங்களில் வீதிகள், பாலங்கள் முற்றாகச் சேதமாகி பிரதேசங்கள் துண்டாடப்பட்டன. இதனால் இலங்கையின் கரையோரப் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தமது வாழ்விடங்களை இழந்து (தற்காலிகமாக) உதவிக்கு கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில் உடனடியாகவே பல உலகநாடுகள் நேரடியாகக் களத்தில் இறங்கி உடனடி நிவாரணம் முதல் மீள் கட்டமைப்பு வரை பல்வேறு உதவிகளை வழங்கத் தலைப்பட்டன. அவ்வாறு துரித கதியில் பல அமைப்புகளும் உதவி செய்ய முற்பட்ட சூழல் மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுத் தந்த அதேவேளை பல பாதகமான மாற்றங்களையும் ஏற்படுத்தின. அதேநேரம் ஆரம்ப காலத்தில் பல குளறுபடிகளும் கலாச்சாரச் சீரழிவுகளும் ஏற்பட்டன. உதவிகள் வழங்கப்பட்ட காலத்தில் அரசியல் தலையீடுகளும் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தின.
நலன்புரி நிலையங்கள்
ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வீதி மீளமைப்பு, சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்தல் என்பன துரித கதியில் நடைபெற்ற அதேவேளை பேரலைகளினால் வீடுகளை இழந்தவர்கள் அவர்களுக்கான புதிய வீடுகள் கட்டித் தரப்படும்வரை தற்காலிக முகாம்கள் அல்லது நலன்புரிநிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, நீர் வழங்கல், சுகாதாரம் போன்றவற்றை அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பார்த்துக் கொண்டன. கடல் அலைகளால் பாதிக்கப்படாத மேட்டுநிலங்களில் இருந்த பாடசாலை வளாகங்களும் சில திறந்த வெளி மைதானங்களிலும் இவ்வாறான தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன.
ஏற்கனவே அங்கு மிகக் குறைவான வசதிகளே இருந்த நிலையில், அங்கிருந்த ஆண்களின் குடிப்பழக்கம் பெண்களுக்கு சங்கடங்களையும் பெரும் சிரமங்களையும் ஏற்படுத்தின. அங்கு சில கலாச்சார சீர்கேடுகளும் தாராளமாக நடைபெற்றன. ஒப்பீட்டளவில் தெற்கைவிட வடக்குக் கிழக்கில் வீடுகள் கட்டிக் கொடுப்பதில் நீண்ட காலதாமதங்கள் காணப்பட்டன. இது இவ்வாறான திருமணத்திற்கு வெளியேயான உறவுகளுக்கு மேலும் இடமளித்தது. மறுபுறத்தில் இது முகாம்களில் தங்கியிருந்தவர்கள் தமது தொழிலுக்கு உடனே திரும்ப முடியாத நிலையை ஏற்படுத்தியது. இதனால் அங்கு இருந்த பல குடும்பங்கள் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களில் தங்கி வாழ வேண்டிய நிலை இருந்தது.
உளவியல் தாக்கமும் தற்கொலை உணர்வும்
சுனாமியினால் பலர் தமது வீடுகளையும் நெருங்கிய உறவுகளையும் ஒரேநாளில் இழந்து போனார்கள். அவர்களுள் பலர் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட ஒரு மரம் போன்றுதான் இருந்தார்கள். அலையோடு அடித்துச் செல்லப்பட்டவர்கள் இறந்தார்களா அல்லது வேறெங்காவது கரை ஒதுன்கினார்களா என்று தெரியாத நிலை உயிர்தப்பியிருந்தவர்களை மேலும் மனவழுத்தத்திற்கு உள்ளாகியது. சில பெற்றோர் தமது காணாமற் போன குழந்தைகளை மாதக்கணக்கில் தேடியலைந்தார்கள்.
உறவுகள், சொத்துக்களின் இழப்புகள் ஒருபுறம், இனி எனது வாழ்வு என்னவாகும், என் எஞ்சியுள்ள குடும்பத்தை எப்படிக் கரை சேர்ப்பது என்ற எண்ணம் மறுபுறமாக மன அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களாக பலர் மாறியிருந்தார்கள். அவர்களில் சிலர் தற்கொலை எண்ணம் கொண்டவர்களாக மாறியிருந்தார்கள். சிலருக்கு உளவள ஆலோசனை கிடைத்தாலும் அவர்கள் அனைவருக்கும் உளவள ஆற்றுப்படுத்துகை கிடைக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
இறப்பும் மறுமணங்களும்
ஆழிப் பேரலையின் தாக்கத்தினால் இறந்தவர்களில் அதிகம் பேர் (60 %) பெண்கள் என்பது உங்களில் பலர் அறிந்ததே. இது பல ஆண்களைத் தபுதாரர்கள் ஆக்கியது. அவர்களில் சிலர் அதிக காலம் காத்திருக்காது ஆறு மாதங்களிலேயே வேறு திருமணம் முடித்துக் கொண்டார்கள். சுனாமியின் பின்னர் சில மாதங்கள் கடந்து அரசின் உதவித் தொகையாக கிடைத்த பணம், பொதுமக்கள், அரசார்பற்ற அமைப்புகள் வழங்கிய பொருட்கள், தொழிலை மீளத் தொடங்க சில நிறுவனங்கள் வழங்கிய நிதியுதவி என்பன பல ஆண்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரித்ததும் இவ்வாறான திருமணங்களைத் துரிதப்படுத்தின எனலாம்.
இவ்வாறு திருமணங்கள் நடைபெற்ற சூழலில் ஏற்கனவே இருந்த பிள்ளைகள் அந்தப் பிள்ளைகளின் பேரன் பேத்திமாரின் பொறுப்பில் விடப்பட்டன. சில பிள்ளைகளை வேறு தாய்வழி உறவினர்கள் பொறுப்பெடுக்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு ஒரு பெற்றோர் (பெரும்பாலும் தந்தை) உயிருடன் இருந்தும் பல பிள்ளைகள் அனாதைகளாக உறவினர் ஆதரவில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சில இடங்களில் கணவனை இழந்த பெண்களும் துரிதமாகவே வேறு திருமணம் செய்து கொண்டனர். சில பிள்ளைகளுக்கு மட்டும் தமது தந்தையுடனே அல்லது தாயுடனே வசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
காணமல் போன குழந்தைகளும் மதமாற்ற சர்ச்சையும்
ஆழிப்பேரலையில் தாக்கத்தினால் பல சிறுவர்கள் இறந்து போன அதேநேரம் பல சிறுவர்கள் (உடல்கள் கிடைக்காமையினால்) காணாமல் போனவர்களாகக் கருதப்பட்டார்கள். ஆனால் அதன் பின்னர் அனாதைகளாக கருதப்பட்ட அல்லது தமது அப்பா, அம்மா யாரென்று தெரியாத (அல்லது சொல்லத் தெரியாது நின்ற) குழந்தைகளைத் தமது குழந்தைகள் என்று ஒரே குழந்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெற்றோர் உரிமை கோரிய வழக்குகளும் நடந்தேறின. உதாரணமாக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த (சுனாமியால் பாதிக்கப்பட்ட) இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தைக்கு ஒன்பது பெற்றோர் உரிமை கோரினர்.
இது ஒருபுறம் இருக்க, அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளில் பலரை மதம் சார்ந்த சில அமைப்புகள் தத்தெடுக்க முன்வந்தன. ஆனால் அந்த அமைப்புகள் தத்தெடுத்த பல குழந்தைகளை தந்திரமாக மதமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டும் எழுந்தது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் சைவ சமயத்தை பின்பற்றிய குழந்தைகளே இவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதேநேரம் ஏன் சைவ / இந்து சமய அமைப்புகள் மற்றைய அமைப்புகள் காட்டிய அதே அக்கறையுடன் அனாதைக் குழந்தைகளை தத்தடுக்க முன்வரவில்லை என்ற கேள்வியும் அக்காலத்தில் எழுப்பப்பட்டது.
பெரும் எடுப்பில் சர்வதேச நிறுவனங்களின் வருகை
ஆழிப் பேரலையால் உறவுகளைப் பறிகொடுத்தும், தாம் பாடுபட்டுச் சேர்த்த சொத்துகள் முற்றாக நாசமாகியும் ஒரே நாளில் நடுத் தெருவுக்கு வந்தவர்கள் கதைகள் ஓராயிரம். அப்படி மனமொடிந்து விழுந்தவர்களை தூக்கிவிட உள்ளூர் மக்களும், அரசும், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வந்தன. அவற்றுக்கும் மேலாக பல சர்வதேச நாடுகளும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் தாமும் இந்தப் பணியில் தம்மை இணைத்துக் கொண்டன. இதில் உடனடி உதவியிலிருந்து நீண்டகால அபிவிருத்தி உதவித் திட்டங்களும் உள்ளடங்கியதாக இருந்தது.
இவ்வாறான உதவிகள், வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பெருந்தொகை நிதி என்பன நாட்டுக்கு பெரும் அந்நியச் செலவாணியை நாட்டுக்கு கிடைக்கச் செய்தன. ஆனால் இவ்வாறு கிடைத்த நிதியின் பின்னர் நிகழ்ந்த பல நிகழ்வுகள் பல சமூக, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியது. உள்ளூர் மக்கள் முற்றிலும் புதிய சவால்களுக்கு முகம் கொடுக்கும் நிலையை ஏற்பட்டது. இன்னொரு விதத்தில் சொல்வதானால் சுனாமிக்குப் பின்னர் கிடைத்த இந்த உதவிகள் மூன்றாம் பேரலையாக இலங்கையின் சிவில் சமூகத்திலும் உள்ளூர் பொருளாதாரத்திலும் சில நிரந்தரப் பாதிப்புகளை ஏற்படுத்தியது எனலாம். அவற்றை விபரமாக அடுத்த பதிவில் பார்ப்போம்!
- வீமன் –