டிரம்ப் கொண்டுவந்த கடுமையான அகதிகள் சட்டத்தைத் தொடரும்படி அனுமதித்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.
கொரோனாப்பரவல் காலத்தில் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய் எல்லைப்பாதுகாப்புச் சட்டமொன்றின்படி அமெரிக்க எல்லைகளில் வந்து அகதிகளாக விண்ணப்பம் செய்கிறவர்களை அதிகாரிகள் வேகமாக விசாரணை செய்து உடனடியாகத் திருப்பியனுப்பலாம். குறிப்பிட்ட அகதிகள் சட்டக் கையாளலைத் தொடரும்படி அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் 5 – 4 பெரும்பான்மையுடன் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான அகதிகள் விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடு எதுவும் செய்ய வழியின்றித் திருப்பியனுப்பிய அந்தச் சட்டத்தை நீக்கலாகாது என்று 19 மாநிலங்கள் நீதிமன்றத்திடம் கோரியிருந்தன. குறிப்பிட்ட சட்டம் அகற்றப்படுமானால் நாட்டுக்குள் குவியும் அகதிகளை நேரிடும் வாய்ப்பின்றி நிலைமைக் கட்டுப்பாடின்றிப் போய்விடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். பெப்ரவரி மாதத்தில் உச்ச நீதிமன்றம் மீண்டும் அந்தச் சட்டத்தை ஆராய்ந்து அறுதியான முடிவை எடுக்கும்.
உச்ச நீதிமன்றத்தின் முடிவைத் தாம் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட ஜோ பைடன் அரசினர் நாட்டின் அகதிகள் வரவேற்பு, மறுவாழ்வுத் திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்றும் அதற்குப் பாராளுமன்றத்தில் ஆதரவைப் பெறவேண்டும் என்றும் குறிப்பிட்டனர். குறிப்பிட்ட சட்டமானது கொரோனாக்காலத்தில் மக்கள் ஆரோக்கியம் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும் அதைத் தொடர்வது பொருத்தமானது அல்ல என்றும் பைடன் அரசு கருதுகிறது. அந்தச் சட்டம் தொடர்வதை ஆதரித்துக் கைதட்டி மகிழ்பவர்கள் ரிபப்ளிகன் கட்சிக்காரர்களாகும். அவர்களது ஆட்சியுள்ள மாநிலங்களே சட்டத்தைத் தொடரும்படி உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டவை ஆகும்.
சாள்ஸ் ஜெ. போமன்