தனது ஆசிரியையைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்திய 6 வயது மாணவன்.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தின் ரிச்னெக் ஆரம்பப் பாடசாலை முதலாம் வகுப்பில் தனது ஆசிரியை மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தான் ஒரு மாணவன். அந்த ஆறு வயதுப் பையனின் செயலால் காயப்பட்ட 30 வயதான ஆசிரியை தனது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து ஓரளவு தேறிவருகிறார் என்று மருத்துவ நிலையத்திலிருந்து அறிக்கை வெளியாகியிருக்கிறது.
இத்தனை குறைந்த வயதிலான மாணவர் எவரும் இதுபோன்ற சம்பவமொன்றில் அமெரிக்காவில் ஈடுபட்டதில்லை. தனது ஆசிரியையைச் சுட்ட அந்த மாணவன் பாடசாலைக்குள் சுற்றித்திரிந்து வேறெவரையும் காயப்படுத்தவில்லை என்று ஆறுதலுடன் தெரிவிக்கிறார்கள் பொலீசார். அந்த மாணவன் பாடசாலைக்குள் துப்பாக்கியை வைத்திருந்தான் என்றும், எங்கிருந்து அந்த ஆயுதத்தைப் பெற்றான் என்று தெரியவில்லை என்றும் பொலீசார் குறிப்பிடுகிறார்கள்.
சம்பவம் நடந்த நியூபோர்ட் நகரம் சுமார் 185,000 பேரைக் கொண்டது. அமெரிக்காவின் விமானத்தயாரிப்புகள் நடக்கும் நகரங்களிலொன்றாகும். குறிப்பிட்ட ஆரம்பப் பாடசாலை சுமார் 550 மாணவர்களைக் கொண்டது. வெர்ஜினியா மாநிலச் சட்டங்கள் ஆறு வயதுள்ளவரை ஒரு வயதுக்கு வந்தவரைப் போன்று நீதியின் முன்னால் நிறுத்தும் சட்டங்களைக் கொண்டதல்ல. அத்துடன் அந்த வயதுள்ள குழந்தை குற்றஞ் செய்ததாக நிரூபிக்கப்பட்டாலும் இளவயதினரைத் திருத்தும் மையங்களுக்கு 6 வயதுள்ளவரை அனுப்ப இயலாது.
பிரத்தியேகமான ஒரு வழக்கறிஞர் நகராட்சியால் தெரிவுசெய்யப்பட்டு குறிப்பிட்ட 6 வயதுப் பையனின் பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து விலக்கி நகர சமூகசேவை அமைப்பினரின் பாதுகாப்பில் வைக்கலாம். குறிப்பிட்ட பையனை எப்படிக் கையாளவிருக்கிறார்கள் என்பது பற்றி மேலதிக விபரங்களைப் பொலீசார் வெளியிடவில்லை.
ஆறு வயதுள்ள ஒருவர் இதுவரை துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட சம்பவம் அமெரிக்காவில் 2000 ஆண்டில் நடந்திருக்கிறது. ஆரம்பப்பாடசாலை ஒன்றின் மைதானத்துக்குள் ஆறு வயதுப் பையனொருவன் துப்பாக்கியால் சுட்டதில் ஆறு வயதான சிறுமியொருத்தியின் கழுத்தில் அச்சூடு பட்டது. மிச்சிகன் நகரின் அருகில் நடந்த அச்சம்பவத்தில் காயப்பட்ட சிறுமி சிறிது நேரத்தில் உயிரிழந்தாள். அதைத் தவிர 7,8,9 வயதுக்காரர் ஈடுபட்ட துப்பாக்கிச் சூடுகள் 1970 களில் நடந்திருப்பதாகவும் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்