நிறுவனங்கள் மீதான வரியைக் கூட்டி, வேலைவாய்ப்புக்களுக்கான திட்டங்களை அறிவித்திருக்கிறார் ஜோ பைடன்.

“வேலை செய்பவர்களுக்குச் சுபீட்சத்தை உண்டாக்கக்கூடிய புதிய திட்டங்களை அறிவிக்கிறேன். இவற்றின் மூலம் பணக்காரர்கள் மட்டுமன்றி, குறைந்த வருமானமுள்ளவர்களுடைய வாழ்வும் செழிக்கும். இத்திட்டங்கள் மூலம் உலகிலேயே, புதிய கண்டுபிடிப்புக்களைக் கொண்டு பலமான பொருளாதாரத்தை உண்டாக்கும் நாடாக அமெரிக்கா மாறும்……….” என்று வார்த்தைகளால் மெழுகி சுமார் 2,300 பில்லியன் டொலர்கள் பெறுமதியான திட்டங்களை அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி.

நகருக்கு வெளியேயிருக்கும் பழைய வீதிகளைப் புதுப்பித்தல், நவீன தரமில்லாத நீர்க்குழாய்களை மாற்றுதல், மின்சாரக் கல வண்டிகளுக்கு மின்சாரம் ஏற்றும் இடங்களைக் கட்டுதல், சுற்றுப்புற சூழலைப் பேணும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல் போன்றவை ஜோ பைடனின் திட்டங்களின் அடிப்படையாக அமையும். 

புதிய வீடுகள் கட்டும் திட்டங்கள், ரயில் பாதைகள், பாடசாலைகள், மருத்துவமனைகள் போன்றவைகளைக் கட்டியெழுப்புவதும், ஏற்கனவே இருப்பவைகளைச் சீர்திருத்திச் சுற்றுப்புற சூழலுக்கு உகந்த எரிசக்தியால் இயங்குவையாக மாற்றப்படும். சிறுபான்மை இனத்தவரின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்கிறார் ஜோ பைடன். 

ஜனாதிபதியின் திட்டங்களுக்கான  செலவுகளுக்கான பணத்தை வரி அதிகரிப்பு மூலம் பெற்றுக்கொள்தலுக்கான ஆதரவைப் பாராளுமன்றத்தில் பெறுவதுதான் இவ்விடயத்தில் மிகப்பெரும் குதிரைக்கொம்பாக இருக்குமென்று அரசியல் விற்பன்னர்கள் கருதுகிறார்கள். “பைடனின் திட்டம் அமெரிக்காவின் அதிக இலாபம் தரும் துறைகளைப் பாதிக்கும். தயாரிப்புச் செலவுகள் அதிகமாகி அதன் மூலம் விற்கும் விலைகள் ஏற்றமடையும். போட்டிச் சந்தையில் இருந்துவரும் பலத்தை அமெரிக்கா இழக்கும்,” என்கிறார்கள் ரிபப்ளிகன் கட்சியினர். 

செனட் சபையில் ஏறக்குறையச் சரிசமமான பலத்துடனிருக்கும் ரிபப்ளிகன் கட்சியினர் நிறுவனங்களின் மீதான வரியை 21 % இலிருந்து 28 % மாக உயர்த்தப் போவதாகச் சொல்லும் ஜோ பைடனின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஜோ பைடனின் கட்சிக்குள்ளும் வரி உயர்த்தலை எதிர்ப்பவர்கள் இல்லாமலில்லை.

எனவே அபிவிருத்தித் திட்டத்துக்காக ஒவ்வொரு டெமொகிரட்டிக் கட்சி செனட் உறுப்பினரின் வாக்கும் ஜோ பைடனுக்குத் தேவைப்படும். அவர்களெல்லோரையும் திருப்திப்படுத்தத் திட்ட வரிகளில் பல மாற்றங்கள் செய்யப்படவேண்டிய நிலைமை உண்டாகும். எனவே இறுதியாக முன்வைக்கப்படப்போகும் திட்டம் எப்படியிருக்குமென்ற கேள்வி எழுகிறது.  

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *