வளைகுடா நாடுகளுக்கான வெற்றிக்கோப்பையை நாலாவது தடவை வென்றது ஈராக்.
ஜனவரி 06 திகதியன்று ஈராக்கில் ஆரம்பித்த அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்கள் நிறைவுபெற்றன. இறுதி மோதலில் ஓமானை எதிர்கொண்ட ஈராக்கிய அணி 3 – 2 என்ற வித்தியாசத்தில் வென்று அந்தக் கோப்பையை மூன்றாவது தடவையாக வென்றெடுத்தது.
அரசியல் காரணங்களுக்காக 1992 – 2004 காலப்பகுதியில் ஈராக் அந்தக் கோப்பைக்கான மோதல்களில் பங்குபற்ற அனுமதிக்கப்படவில்லை. 53 வது தடவையாக நடக்கும் வளைகுடா நாடுகளுக்கிடையேயான கிண்ண மோதல்களில் அதிக தடவைகள் வென்ற நாடு குவெய்த் ஆகும். சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகள் தலா மூன்று தடவை கிண்ணத்தை வென்றன.
வியாழனன்று பஸ்ராவில் நடந்த மோதல் நுழைவுச்சீட்டின்றி அரங்கத்துள் நுழைய முற்பட்டவர்களால் ஏற்படுத்திய நெரிசல்களால் விளைந்த குழப்பங்களுடன் ஆரம்பித்தது. 60,000 பார்வையாளர்கள் குழுமியிருந்தபோது நெரிசல்களால் பதட்ட நிலைமை ஏற்பட்டது. ஆகக்குறைந்தது 4 பேர் மரணமடைந்தார்கள். பெரும் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் சுமார் 80 பேர் என்று பஸ்ராவிலிருந்து செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஈராக் – ஓமான் மோதலில் ஈராக் வீரர் இப்ராஹிம் பயேஷ் 24 வது நிமிடத்திலேயே ஓமான் வலைக்குள் பந்தைப் போட்டார். வழக்கமான 90 நிமிடங்களை முடித்திருந்தபோதும் அதே நிலைமை தொடர்ந்தது. இடையே வெவ்வேறு காரணங்களுக்காக இழக்கப்பட்டதற்காகக் கொடுக்கப்பட்ட மேலதிக நிமிடங்களுக்குள் ஓமான் வீரார் சலா அல் -யஹ்யேய் ஈராக் வலைக்குள் பந்தைப் போட்டதால் எவருக்கும் வெற்றியற்ற நிலைமை உண்டாகியது. அதனால் தொடர்ந்து விளையாடுவதற்காக இரண்டு அணிகளுக்கும் மேலதிக நேரம் கொடுக்கப்பட்டது.
மேலதிக நிமிடங்களிலும் அணிகள் இரண்டும் தலா ஒரு கோல்களைப் போட்டன. இறுதியாக 122 வது நிமிடத்தில் ஈராக்குக்காக மானவ் யூனுஸ் போட்ட கோல் ஈராக் 3 – 2 என்ற வித்தியாசத்தில் வெல்லக் காரணமானது.
சாள்ஸ் ஜெ. போமன்