கத்தார் எயார்வேய்ஸ் – எயார்பஸ் நிறுவனங்கள் தமக்கிடையே சமாதானம் செய்துகொண்டன

எயார்பஸ் நிறுவனத்துக்கும் கத்தார் எயார்வேய்ஸுக்கும் இடையே தயாரிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்ட விமானங்களின் நிறப்பூச்சுப் பற்றி ஏற்பட்ட தகராறு நீதிமன்றத்துக்கு வெளியே தீர்க்கப்பட்டிருக்கிறது. அதன் விபரங்கள் வெளியிடப்படவில்லை. 

இரு நிறுவனங்களுக்குமான தகராறு எயார்பஸ் நிறுவனம் கத்தார் எயார்வேய்ஸுக்குப் புதியதாக விற்றிருந்த A350 ஜெட்லைனர் விமானங்கள் பற்றியது. அவைகள் பாவனைக்குப் பாதுகாப்பானவை அல்ல என்று கத்தார் எயார்வேய்ஸ் குறைசொன்னதால் இனிமேல் அவர்களுக்கு விமானம் விற்பதில்லை, ஏற்கனவே அவர்களால் வாங்கத் திட்டமிடப்பட்டிருந்த விமானங்களும் அவர்களுக்குக் கொடுக்கப்படாது என்றது எயார்பஸ் நிறுவனம்.

தமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டபின் ஏற்கனவே தகறாறு சமயத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் திரும்பிப்பெறுவதாகவும், விமானங்களில் திருத்தங்களை எயார்பஸ் நிறுவனம் செய்யப்போவதாகவும் இரு தரப்பாரும் சேர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. 

கத்தார் எயார்வேய்ஸ் கொள்வனவு செய்யத் திட்டமிட்டிருந்த ஐம்பது A321neos விமானங்கள் 2026 இல் அவர்களுக்குக் கொடுக்கப்படும். எயார்பஸ் ரத்துசெய்த A350 விமானங்கள் 23 ம் இவ்வருடமே கத்தார் எயார்வேய்ஸ் நிறுவனத்துக்குக் கொடுக்கப்படும். இரு தரப்பாருக்கும் பாதிப்பு இல்லாதபடி சர்ச்சை தீர்த்துக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடும் இரண்டு நிறுவனங்களும், தொடர்ந்தும் வர்த்தகத்தில் ஈடுபடும் என்றும் தெரிவித்திருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *