தலைக்கு 20 அண்டிஜீன் பரிசோதனைகளை வாங்கிச் சேர்த்த ஆஸ்ரேலியா. பெரும்பாலானவை காலாவதியாகின்றன.
கொவிட் 19 பரவிய காலத்தில் ஒருவருக்கு அவ்வியாதித் தொற்று உண்டாகியிருக்கிறதா என்பதை வேகமாக அறிந்துகொள்ளப் பாவிக்கும் antigen rapid test மிகவும் பிரபலமாகின. அவற்றைத் தத்தம் நாடுகளில் தேவையான அளவு கிடைப்பதற்காகப் பல நாடுகளும் ஒழுங்குசெய்தன. ஆஸ்ரேலியாவும் அதன் பிராந்தியங்களும் 518 மில்லியன் பரிசோதனைகளைக் கொள்வனவு செய்தன.
நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 20 பரிசோதனைகள் என்ற கணக்கில் ஆஸ்ரேலியாவின் கொள்வனவு இருந்தது. 26 மில்லியன் மக்கள் தொகையுள்ள ஆஸ்ரேலியா கொள்வனவு செய்த அப்பரிசோதனைகள் பல வினியோகிக்கப்பட்டன. அவற்றில் நூற்றுக்கணக்கான மில்லியன் பரிசோதனைகள் இன்னும் பாவிக்கப்படாமல் விரைவில் காலாவதியாகவிருக்கின்றன. அவற்றை என்ன செய்வது என்ற கேள்வி ஒரு அரசியல் பிரச்சினையாக மாறியிருக்கிறது.
விக்டோரியா மாநிலம் தனது 6.6 மில்லியன் மக்களுக்கு, ஆளுக்கு 30 அண்டிஜீன் பரிசோதனைகளைக் கொள்வனவு செய்திருக்கிறது. அவர்கள் கொள்வனவு செய்த 200 மில்லியன் பரிசோதனைகளில் சுமார் 80 மில்லியன் பரிசோதனைகள் பாவிக்கப்படாமல் காலாவதியாகும் திகதியை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. குவீன்ஸ்லாந்து வாங்கியவைகளில் சுமார் 3,47 மில்லியன் பரிசோதனைகள் வரும் மூன்று மாதங்களில் காலாவதியாகின்றன.
ஆஸ்ரேலியா தன்னிடமிருக்கும் பரிசோதனைகளில் ஒரு பகுதியைப் பக்கத்திலிருக்கும் தீவுகளுக்கும், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும் கொடுத்து வருகிறது. ஆயினும், வளரும் நாடுகள், வறிய நாடுகளில் கொவிட் 19 பரிசோதனைகள் செய்தல் பெரிதும் குறைந்திருக்கின்றன. இந்த நிலையில் தானம் பெற்றுக்கொள்ளவும் நாடுகள் தயாராக இல்லை.
இதற்கான தீர்வு பெரும்பாலான பரிசோதனைகளை அழித்துவிடுவதே என்கிறார்கள் ஒரு சாரார். அதைச் செய்ய முற்பட்டாலும் அப்பரிசோதனைகளிலிருக்கும் காகிதம், பிளாஸ்டிக் போன்றவற்றைத் தனித்தனியாகப் பிரித்தே அழிக்கவேண்டியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்