மகளைக் கொன்ற தந்தையின் செயலால் ஈராக் மக்கள் குடும்ப வன்முறைகளை எதிர்த்துக் குரலெழுப்புகிறார்கள்.

ஜனவரி மாதத்தின் கடைசி நாளில் தனது மகளான டிபா அல்-அலி தனது தந்தையால் கொல்லப்பட்டதாக ஈராக்கின் உள்துறை அமைச்சின் காரியதரிசி குறிப்பிட்டிருக்கிறார். குடும்பப் பிரச்சினையொன்றைத் தீர்த்துவைக்கச் சிலர் முயன்றும் மகளைத் தகப்பன் கொலைசெய்துவிட்டுப் பொலீசில் சரணடைந்திருப்பதாக விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.

துருக்கியில் தனியாக வாழ்ந்துவந்த 22 வயதான டீபா அல்-அலி யூடியூப் மூலம் தனது தினசரி வாழ்க்கையைப் பகிர்ந்துவந்தார். அப்படங்களில் அவளது காதலனும் தோன்றுவது வழக்கமாக இருந்தது. அவற்றைப் பார்த்த உறவினர்கள் டீபாவின் தந்தையிடம் காட்டி அவரை உசுப்பேத்திவிட்டனர். மகள் தனியாக வாழ்வது குடும்பத்துக்கு அவமானமென்று கோபத்துடன் துள்ளிய தந்தையைச் சமாதானம் செய்யவே டீபா ஈராக்குக்கு வந்திருந்தாள். அவளையும் தந்தையையும் சமாதானம் செய்துவைக்கச் சிலர் முயன்றதாகவும் அதற்காக அவள் வந்திருந்த சமயத்திலேயே தகப்பனால் கொல்லப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அக்கொலையையடுத்து ஈராக்கில் குடும்ப வன்முறைகள் ஒழிக்கப்படவேண்டும் என்று கோரிப் பலர் குரலெழுப்பியிருக்கிறார்கள். நாட்டின் உச்ச நீதிமன்ற வளாகத்தில் கூடிய பெண்கள் உரிமை, மனித உரிமை அமைப்பினர் வீதியை மறித்துக் கோஷமெழுப்பினார்கள். “பெண்களைக் கொல்வதை நிறுத்துங்கள்” என்ற பாதாகைகளைப் பிடித்துக்கொண்டு அவர்கள் தமது எதிர்ப்பைக் காட்டிய படங்கள் பல சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *