சிரியாப் போரில் ஈடுபட்ட சகல தரப்பாரும் மனித குலத்துக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-அறிக்கை.

சிரியாவின் அரசும், அதற்கு எதிராக நாட்டில் போராடும் சகல குழுக்களும் தமது போர்களில் மிலேச்சத்தனமாக குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக பல்லாயிரக்கணக்கான சாட்சிகளையும், ஆதாரங்களையும் கொண்டு குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-வின் அறிக்கை. அப்படியான குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் என்று தெரியவருகிறது.

மிரட்டல், விசாரணை, எதிர்ப்பகுதியினரைப் பயப்படுத்துதல், நடப்பவைகளை மறைத்தல், எதிர் மத, இனத்தினரை அழித்தல் போன்ற நோக்கங்களுக்காகப் போரில் ஈடுபட்ட சகல தரப்பாரும் தமக்கு இஷ்டப்பட்டபடி மற்றவர்களைக் கைதுசெய்தும், கடத்தியும் சென்று அவர்களைச் சித்திரவதைக்குட்படுத்தினார்கள். 11 வயதுப் பிள்ளைகளும் கடத்திச் சிறைவக்கப்பட்டுச் சித்திரவதைக்கும், வன்புணர்வுகளுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். 

மலசலகூடங்கள் உட்பட்ட எந்த வசதிகளுமில்லாத கட்டடங்களில், இருளான அறைகளில் அடைக்கப்பட்ட அவர்களுக்கு உணவெதுவும் கொடுக்காமலும், அழுகிய உணவைக் கொடுத்துமிருக்கிறார்கள். அதே அறைக்குள்ளேயே கொத்துக்கொத்தாக அடைக்கப்பட்டிருந்தவர்கள் தங்கள் இயற்கைத் தேவைகளைப் பூர்த்திசெய்யவேண்டியதாக இருந்திருக்கிறது என்று அறிக்கையில் விபரிக்கப்படுகிறது.

புதுப்புது, வித்தியாசமான முறைகளில் சித்திரவதைக் கூடங்களில் தாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோரை அடையாளங் கண்டு அதற்கான சாட்சிகளையும் சேகரித்திருப்பதாக குறிப்பிடுகிறது அறிக்கை. பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் உயிர் தப்பினாலும் தத்தம் முழு வாழ்க்கையையும் இழந்ததாக உணருமளவுக்கு சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *