“பாடசாலைப் பிள்ளைகளில் மூன்றிலொருவருக்கு அங்கே குடிநீர் வசதியில்லை,” என்கிறது யுனெஸ்கோ.
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞானம், கலாச்சாரம் ஆகியவைகளுக்கான அமைப்பான யுனெஸ்கோ வெளியிட்டிருக்கும் சமீபத்தைய ஆராய்ச்சி அறிக்கை உலக நாடுகளின் பாடசாலை மாணவர்களில் மூன்றிலொருவருக்கு அங்கே குடிக்கும் நீர் கிடைக்கும் வசதியில்லை, சாதாரண சுகாதார வசதியற்றவை என்கிறது. பாதிக்கும் அதிகமான பாடசாலைகளில் கைகழுவும் வசதியுமில்லாததால் அது பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு பங்கம் விளைவிக்கக்கூடியது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
கொவிட் 19 காலத்தில் எப்போது கைகளைக் கழுவிக்கொள்வது முக்கியம் என்று வலியுறுத்தப்பட்டது. அதற்கான நீர் வசதியோ, மலசல கூடங்களோ இல்லாத பாடசாலைகள் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பையே விளைவிக்கவல்லவை.
பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை மாதவிலக்குக்காலத்தில் சவர்காரம், நீர் வசதியில்லாவிட்டால் அவர்கள் பாடசாலைக்குப் போகமுடியாது. பூட்டானில் 25 விகிதமான சிறுமிகள் அச்சமயத்தில் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்கிறார்கள், புர்க்கினோ பாசோவில் அது சுமார் 70 % ஆகும்.
“கல்விக்கூடங்களில் அரசுகள் தமது முதலீடுகளை அதிகரிக்கவேண்டும். ஒழுங்கான சுகாதார வசதிகள், உணவு, பாதுகாப்பு இல்லாத பாடசாலைகளில் பிள்ளைகள் தமது கல்வியை ஒழுங்காகக் கற்றுக்கொள்ள முடியாது,” என்கிறார் குறிப்பிட்ட ஆராய்ச்சியறிக்கையை வெளியிட்ட யுனெஸ்கோ அதிகாரி.
சாள்ஸ் ஜெ. போமன்